பிருத்வி ஷா விளாசல், சூப்பர் ஓவரில் வென்றது டெல்லி!

பிருத்வி ஷா விளாசல், சூப்பர் ஓவரில் வென்றது டெல்லி!
பிருத்வி ஷா விளாசல், சூப்பர் ஓவரில் வென்றது டெல்லி!
Published on

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி, சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் டெல்லியில் நேற்று மோதின. முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், நாயக் 7, உத்தப்பா 11 ரன்னில் ஏமாற்றினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த லின் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். எதிர்பார்க்கப்பட்ட ராணா 1 ரன்னில் நடையைக் கட்டினார். சுப்மன் கில் 4 ரன்னில் அவுட் ஆக, 61 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது அந்த அணி .   

சரிவில் இருந்த அணியை, கேப்டன் தினேஷ் கார்த்திக், ரஸல் ஜோடி மீட்டது. ஒரு கட்டத்தில் 120 ரன்களை தாண்டுமா? என்ற நிலையில் இருந்த அணியை, 13.5 ஓவரில் 100 ரன்களை எட்ட வைத்தனர். ரஸல், சிக்ஸர் மழை பொழிந்தார். தினேஷ் கார்த்திக்கும் தன் பங்குக்கு பவுண்டரிகளாக விளாசினார்.

 ரஸல் 23 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர், 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மொத்தம் 6 சிக்ஸர், 4 பவுண்டரி அவர் விளாசினார். அதே போல், 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து தினேஷ் கார்த்திக்கும் ஆட்டமிழந்தார். அவர் 2 சிக்ஸர், 5 பவுண்டரி எடுத்தார். கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. 

பின்னர் ஆடிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா அதிரடி காட்டினார். தவான் 16 ரன், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 43 ரன், ரிஷாப் 11 ரன் என ஆட்டமிழந்தாலும் பிருத்வி ஷா சிறப்பாக ஆடினார். அவர் 55 பந்தில் 12 பவுண்டரி 3 சிக்சருடன் 99 ரன் எடுத்து கேட்ச் ஆனார். கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணியால் 5 ரன் மட்டுமே எடுக்க முடிந்ததால் ஸ்கோர் சமன் ஆனது.

இதையடுத்து சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட்டது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் ஐயரும் ரிஷாப் பன்டும் களமிறங்கினர். பந்தை பிரசித் கிருஷ்ணா வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார் ரிஷாப். அடுத்த பந்தில் பவுண்டரி விளாசிய ஸ்ரேயாஸ், அதற்கடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் பிருத்வி ஷா வந்தார். ஓவர் முடிவில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 10 ரன் எடுத்தது. 

தொடர்ந்து கொல்கத்தா அணி களமிறங்கியது. ரஸலும் தினேஷ் கார்த்திக்கும் களமிறங்கினர். டெல்லி அணி சார்பில் ரபாடா பந்துவீசினார். முதல் பந்தில் பவுண்டரி விளாசினார் ரஸல். அடுத்த பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. மூன்றாவது பந்தில் ரஸலை போல்டாக்கினார் ரபாடா. அடுத்து வந்த ராபின் உத்தப்பா நான்காவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். அடுத்தடுத்த பந்துகளில் அவர்களில் பவுண்டரியோ, சிக்சரோ விளாச முடியவில்லை. அந்த அணியால் ஒரு விக்கெட் இழப்புக்கு 7 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது டெல்லி அணி.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com