பிருத்வி ஷா காயம்: இந்திய கிரிக்கெட் அணிக்கு சிக்கல்!

பிருத்வி ஷா காயம்: இந்திய கிரிக்கெட் அணிக்கு சிக்கல்!

பிருத்வி ஷா காயம்: இந்திய கிரிக்கெட் அணிக்கு சிக்கல்!
Published on

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா கணுக்காலில் காயம் அடைந்துள்ளதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. டிசம்பர் 6ஆம் தேதி முதல் போட்டி தொடங்குகிறது. இதை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி பங்கேற்க இருக்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய போர்டு லெவன் அணியுடன் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதில் சிறப்பாக செயல்பட்ட தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷாவை, டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இதற்காக முரளி விஜய்யுக்கு பயிற்சி ஆட்டத்தில் ஆட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இந்நிலையில் அவர் பயிற்சி ஆட்டத்தின் போது, எல்லைக்கோட்டின் அருகே அவர் பந்தை பிடிக்க முயன்றபோது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் நடக்க முடியவில்லை. பிசியோதெரபிஸ்ட் அங்கு சென்று சிகிச்சை அளித்தார். இருந்தாலும் அவரால் நடக்க முடியாததால் டிரெஸ்சிங் ரூமுக்கு அவரை தூக்கிக்கொண்டு வந்தனர்.  பின்னர் அவரை ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டி தொடங்கும் டிசம்பர் 6 ஆம் தேதிக்குள் காயம் குணமடைந்துவிட்டால் பிருத்வி ஷா அணியில் இடம்பிடிப்பார். இல்லை என்றால் கே.எல்.ராகுலும் முரளி விஜய்யும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்றும் காயத்துக்காக சில வாரங்கள் அவர் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்றால் ஷிகர் தவான் அல்லது மயங்க் அகர்வால் அழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.  

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com