'சாய் பாபா.. நீ அனைத்தையும் பார்க்கிறாய்' - அணியில் இடம் கிடைக்காத பிரித்வி ஷா புலம்பல்
இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் தவித்துவரும் பிரித்வி ஷா, நியூசிலாந்து தொடரிலும் இடம்பெறவில்லை.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த பிறகு, இந்திய அணி நியூசிலாந்திற்கும் அதை தொடர்ந்து வங்காளதேசத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. இதனைத்தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் வங்காளதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய மூத்த வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் தவித்துவரும் பிரித்வி ஷா, இந்த தொடரிலும் இடம்பெறவில்லை. அந்த விரக்தியில் பிரித்வி ஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் சாய் பாபாவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள பிரித்வி ஷா, ''சாய் பாபா.. நீ அனைத்தையும் பார்க்கிறாய் என நம்புகிறேன்..'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா கூறுகையில், ''பிரித்வி ஷாவுக்கு விரைவில் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படும் . ஷர்பிராஸ் கானை பொறுத்தவரை, அவர் இந்திய அணியில் இடம்பெற நல்ல போட்டியாளர் தான். ஆனால் தற்போது அணியில் இடமில்லை'' என்று கூறியுள்ளார்.
தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதற்காக பிரித்வி ஷாவுக்கு கடந்த 2019இல் 8 மாதம் விளையாட தடை விதிக்கப்பட்டது. தடைக் காலம் நிறைவடைந்த பின்னரும் அவர் இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் அவர் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறார். பிரித்வி ஷா இந்திய அணிக்காக 5 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: 'ஓய்வுக்குப் பின் போதைப் பழக்கத்துக்கு அடிமையானேன்' - மனம்திறந்த வாசிம் அக்ரம்!