அறுபத்து நான்கு கட்டங்கள் கொண்ட செஸ் விளையாட்டில் கோலோச்சி வரும் பதினைந்து வயதேயான தமிழன் பிரக்ஞானந்தாவின் பிறந்த நாள் இன்று.
உலகளவில் மிக இளம் வயதில் பதின் பருவம் எட்டுவதற்குள் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றவர்களில் பிரக்ஞானந்தாவும் ஒருவர்.
இந்தியாவுக்காக கடந்த 2018இல் இந்த கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற தமிழர்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இதே நாளில் கடந்த 2005இல் பிறந்தார் பிரக்ஞானந்தா. மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர். அவரது அப்பா ரமேஷ் பாபு கூட்டுறவு வங்கியின் மேலாளர். அம்மா நாகலட்சுமி.
பிரக்ஞானந்தாவுக்கு செஸ் விளையாட்டை அறிமுகம் செய்து வைத்தது அவரது அக்கா வைஷாலி தான். பள்ளியில் அகர எழுத்துக்களை பயின்ற போதே செஸ் விளையாடியும் பழகியுள்ளார்.
வழக்கமாக விளையாட்டு துறையில் சாதிப்பவர்களுக்கு பெற்றோர்களின் சப்போர்ட் அதிகம் இருக்கும். பிரக்ஞானந்தா செஸ் விளையாட்டில் சாதிக்கவும் அவரது பெற்றோர் பெரிதும் சப்போர்ட் செய்துள்ளார்கள். பல்வேறு நிதி நெருக்கடிகளை சமாளித்தபடி பிரக்ஞானந்தாவின் விளையாட்டு மோகத்திற்கு ஊக்கம் கொடுத்துள்ளனர்.
அதன் பலனாக செஸ் விளையாட்டில் அதிக கவனம் செலுத்திய பிரக்ஞானந்தா மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் சாதித்துள்ளார். அதுவே சர்வதேச அளவில் இந்தியாவுக்காக பிரக்ஞானந்தா விளையாடவும் அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளது.
ஏழு வயதில் FIDE மாஸ்டர் பட்டமும், எட்டு(2013) மற்றும் பத்து(2015) வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இளம் செஸ் சாம்பியன் பட்டத்தையும் பிரக்ஞானந்தா வென்றார். தொடர்ந்து 2016இல் உலகின் யங் இன்டெர்நேஷ்னல் மாஸ்டர் என்ற பட்டத்தையும் வென்றார்.
பின்னர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல ஆர்வம் காட்டிய பிரக்ஞானந்தா அதற்கான தகுதி சுற்றுகளிலும் வெற்றி பெற்று, FIDE ரேட்டிங்கும் பெற்றார். அதன் மூலாம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பன்னிரண்டு வயதில் வென்றார்.
தற்போது FIDE ரேட்டிங்கில் 2608 புள்ளிகளோடு இந்தியாவுக்காக சதுரங்க ஆட்டம் ஆடி வருகிறார் பிரக்ஞானந்தா.
தொடர்ந்து பல போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவுக்காக பெருமை தேடி தரவுள்ளார் தமிழர் பிரக்ஞானந்தா.
ஹேப்பி பர்த் டே...