ஐபிஎல் ஏலத்தில் பிராப்சிம்ரன் சிங் என்ற 17 வயது விக்கெட் கீப்பரை ரூ.4.8 கோடிக்கு பஞ்சாப் அணி எடுத்துள்ளது.
2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 12வது ஐபிஎல் தொடரின் ஏலம் நேற்று நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக 14 நாடுகளைச் சேர்ந்த 1003 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் பதிவு செய்த வீரர்களில் 346 பேரை ஏலப் பட்டியலுக்கு ஐபிஎல் நிர்வாகக் குழு தேர்வு செய்து, ஏலம்விட்டு வருகிறது. இதில் யுவராஜ் சிங், ப்ராண்டன் மெக்கல்லம் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் விலை போகவில்லை. அதே சமயம் உனாட்கட் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இளம் வீரர்கள் ரூ.8.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது பேசு பொருளானது.
இவர்களைப் போன்றே யாரும் எதிர்பார்க்காத விதமாக பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலாவை சேர்ந்த 17 வயது சிறுவனான பிரப்சிம்ரன் சிங் என்பவர் ரூ.4.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவரை ஏலத்தில் எடுத்ததும் பஞ்சாப் அணி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவரை ஏலத்தில் எடுப்பதற்கு 4 அணிகள் மத்தியில் கடும் போட்டி நிலவியது.
Read Also -> ஆரம்ப விலைக்கே விலை போன யுவராஜ் சிங்
இதே வருடத்தில் பஞ்சாபில் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்டோருக்கான மாவட்ட கிரிக்கெட் தொடரில் பிராப்சிம்ரன் 298 (301) ரன்கள் எடுத்துள்ளார். இதைத்தொடர்ந்தும் பல போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதன் காரணமாகவே அவர் ரூ.4.8 கோடி அளவிற்கு ஏலம் சென்றுள்ளார். இவரது உறவினர் அன்மோல்ப்ரீத் சிங் ரூ.80 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.