`விளையாடி தோற்றிருந்தா பரவால; விளையாடாமலேயே தோற்றதுதான்...!’ - வலிகளும் ரொனால்டோவும்!

`விளையாடி தோற்றிருந்தா பரவால; விளையாடாமலேயே தோற்றதுதான்...!’ - வலிகளும் ரொனால்டோவும்!
`விளையாடி தோற்றிருந்தா பரவால; விளையாடாமலேயே தோற்றதுதான்...!’ - வலிகளும் ரொனால்டோவும்!
Published on

கிரிஸ்டியானோ ரொனால்டோ. இப்போதைக்கு உலகமே உச்சரிக்கும் ஒரு பெயர், இதுவாகத்தான் இருக்கும். அதற்கு முக்கிய காரணம், கத்தாரில் நடைபெறும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022. அப்படியென இந்த உலகக்கோப்பையில் ரொனால்டோவுக்கு தனி இடம் என்கின்றீர்களா? ரொனால்டோவுக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பை. கடந்த 16 ஆண்டுகளாக, சுமார் 5 உலகக்கோப்பைகளில் விளையாடிய ரொனால்டோவுக்கு, இது ஆறாவது உலகக்கோப்பை; கடைசி உலகக்கோப்பை.

கிட்டத்தட்ட 8 வயதிலிருந்து கால்பந்தை எட்டி உதைக்கும் ரொனால்டோவுக்கு, கிடைக்காத விருதும் இல்லை; அவர் பெறாத பெயரும் இல்லை! தந்தை நகராட்சியில் தோட்டக்காரர்.... தாய் சமையல்காரர்... இப்படியான பெற்றோருக்கு பிறந்த ரொனால்டோ, வறுமையை ஒழிக்க தனது 8 வயதிலேயே உள்ளூர் கால்பந்து அணிக்காக விளையாடத் தொடங்கியிருக்கிறார். வறுமையிலிருந்து தப்பிக்க ஓடிய தூரம், நமக்கெல்லாம் சொன்னாலும் புரியாது; சொல்லுக்குள்ளும் அடங்காது.

தன்னுடைய அசாத்திய திறமையால், போர்ச்சுகல் அணிக்காக தேர்வானவர் ரொனால்டோ. கடைசியாக 2021-ல் ரொனால்டோ 23.6 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த மாதத்தில் அதிலிருந்து நீக்கப்பட்டார். பின் வேறொரு அணிக்காக விளையாடுவார் என தகவல்கள் வெளியாகின. இருப்பினும் தற்போது வரை அவர் எதுவும் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. அன்று தனது 8 வயதில் வறுமையை ஒழிக்க பந்துகளை உதைக்க கற்றுக்கொண்ட ரொனால்டோவுக்கு, இன்று 37 வயது.

வறுமையின் எல்லையிலிருந்த அந்த ரொனால்டோவிடம் 2022ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கின் படி அவருடைய சொத்து மதிப்பு 115 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ஒவ்வொரு கால்பந்து போட்டிகளிலும் அவர் விளையாட 60 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பளமாக பெறுவதாக சொல்லப்படுகிறது. அதாவது நம்ம ஊர் மதிப்புக்கு, ஒரு போட்டிக்கு 6 கோடி ரூபாய். இதேபோல இன்ஸ்டாவில் ஒரு போஸ்ட் போடுவதற்கே, ரொனால்டோ கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் சம்பளமாம்.

இவ்வளவு இருந்தும், ரொனால்டோவுக்குள் ஒரேயொரு ஏக்கம்தான். தனது இந்த 30 ஆண்டுகளையொட்டிய விளையாட்டு வாழ்க்கையில் எத்தனையோ கோல்களை தன் அணிக்காக அடித்திருந்தாலும்கூட, உலகக்கோப்பையை பெற்றுத்தரவில்லையே என்பதுதான் அது. இந்த ஆண்டு போட்டிதான் தனக்கு இறுதி உலகக்கோப்பை என்பதால், தன் அணிக்காக எப்பாடுபட்டாவது கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்ற உந்துதல் அவருக்குள் அனலாக இருந்தது. ஆனால் அந்த அனல், தற்போது சுடர்விடாமல் போயுள்ளது. இதனாலோ என்னவோ, உலகக்கோப்பையில் தனது இறுதிநாள் போட்டியில் மைதானத்துக்குள்ளாகவே கண்ணீர்விட்டு கதறினார் உலகின் டாப் மோஸ்ட் ஸ்டார் ப்ளேயர் ரொனால்டோ!

ரொனால்டோவின் கண்ணீருக்கு காரணம், தன்னால் கோப்பையை அடிக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல. மாறாக, வாய்ப்பே கிடைக்காம தோத்துட்டோமே என்பதுதான். விளையாடி தோற்பது ஒரு வலியென்றால், அதைவிட பன்மடங்கு பெரியது விளையாட வாய்ப்பே கிடைக்காமல் தோற்பது. ஆம், ரொனால்டோவின் இறுதி உலகக்கோப்பை போட்டியில் அதுதான் நடந்தது. ரொனால்டோவுக்கு மைதானத்துக்குள் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதுவே அந்தப் போட்டியை போர்ச்சுகல் அணி தோற்றதற்கான காரணமாக சொல்கின்றனர் கால்பந்தாட்ட ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள்.

அதுவும் 2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் போர்ச்சுகல் அணி கடைசியாக விளையாடிய இரு போட்டிகளிலும் களமிறக்கப்படாமல் பென்ச்சில் அமரவைக்கப்பட்டார் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அதில் ஒன்று, காலிறுதி போட்டி என்பது மேலும் சோகம். சப்ஸ்டிட்யூட்டாக, கடைசி நிமிடங்களில் ரொனால்டோ களமிறக்கப்பட்டவே, அவர் இடத்தை நிரப்ப முடியாமல் அத்தனை நிமிடங்களும் போராடியது போர்ச்சுகல் அணி. இந்தப் போராட்டத்தில் இறுதியில் தோற்று உலகக்கோப்பை போட்டிகளிலிருந்து முழுவதுமாக வெளியேறியது போர்ச்சுகல்.

ரொனால்டோ பென்ச்சில் அமரவைக்கப்பட்ட முதல் போட்டி, சுவிட்ஸர்லாந்துக்கு எதிரானது. அப்போது ரொனால்டோ பென்ச்சில் அமரவைக்கப்பட்ட போது, போர்ச்சுகல் அணி அசாத்திய வெற்றியை அடைந்தது. சொல்லப்போனால், `ரொனால்டோ இல்லையென்றாலும் போர்ச்சுகல் சூப்பராக விளையாடும் போல’ என பார்வையாளர்களை நினைக்க வைக்கும் அளவுக்கு போட்டி சிறப்பாக அமைந்தது. ரொனால்டோவுக்கு பதிலாக அப்போட்டியில் களத்தில் இறக்கப்பட்ட கோன்கலோ ராமோஸ், அன்றைய தினம் 3 கோல்களை அடித்து அசாத்தியமாக விளையாடினார். இப்படியான சூழலில்தான் அதேபோல காலிறுதி ஆட்டமும் இருந்துவிடுமென நினைத்து, அணியின் கோச் ஃபெர்னாண்டஸ், ரொனால்டோவை களத்தில் இறக்காமல் விட்டுவிட்டார். ஆனால் அவருடைய கணக்கு தப்பாகிவிட்டது. போர்ச்சுக்கல் அணி 0-1 என்ற கணக்கில் மொராக்காவிடம் தோல்வியை தழுவியது.

இந்த போர்ச்சுகல் - மொரோக்கா ஆட்டத்தின்போது, மொரோக்கா வீரர் யூசப் ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதன்பின்னர், இரு அணியும் கோல் போடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இருப்பினும் யாராலும் கோல் எதையும் அடிக்க முடியவில்லை. கடைசி நேரத்தில் போர்ச்சுகல் வீரர்கள் எவ்வளவோ முயன்று பார்த்தனர். கூடுதல் நேரமாக கொடுக்கப்பட்ட 8 நிமிடங்களில் கூட போர்ச்சுகலால் கோல் அடிக்க முடியவில்லை. கோல் போட பல வாய்ப்புகளை அவர் தவறவிட்டனர். 

முதல் போட்டியில் தான் வெளியே அமரவைக்கப்பட்டபோது, ரொனால்டோ மனம் கலங்கினாலும்கூட ஏமாற்றம் என்று அதை நினைக்கவில்லை. `நாம் இறங்காவிட்டாலும், அணியினர் ஜெயித்து விட்டனர்’ என மகிழ்ச்சியே அடைந்தார். ரொனால்டோவை சுற்றியிருந்த எல்லோருமே இதுபற்றி கேள்வி கேட்டனர். அவ்வளவு ஏன்… ரொனால்டோவின் காதலியேவும் தனது அதிருப்தியை கடுமையாக முன்வைத்தார். `ரொனால்டோவை உள்ளே இறக்காதது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா?’ என பதிவிட்டார். ஆனால் ரொனால்டோ, `போர்ச்சுகலுக்கு வலிமை சேரட்டும்’ என ட்வீட் போட்டார். ரொனால்டோ அந்த ஆட்டத்தில் ஏன் இறக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்தபோது, “அவர் அதற்கு முந்தைய ஆட்டத்தின்போது (தென் கொரியா - போர்ச்சுகலுக்கு இடையானது) மூன்று பெரிய தவறுகளை செய்தார்.

முதலாவது, தான் அடிக்க வேண்டிய கோல்-ஐ அடிக்காமல் விட்டது. இரண்டாவது தென் கொரியா அணி கோல் அடிப்பதற்கான வாய்ப்பை வழங்கியது. மற்றொன்று கோல் அடிப்பதற்கான வாய்ப்பை தாமே தவற விட்டது. அடுத்தது, ரொனால்டோ செய்த தவறுகளுக்காக அவருக்கு பதிலாக மாற்று வீரரை சான்டோஸ் களமிறக்கியபோது, ரொனால்டோ தனது உடல்மொழி மூலமாக அதிருப்தியை தெரிவித்தது. இந்த மூன்றின் காரணமாக, ரொனால்டோவுக்கு அவரது கோச் ஃபெர்னாண்டஸூக்கும் இடையே பனிப்போர் உருவானது” என்று கூறப்பட்டது. ஆனால் இந்த பனிப்போர் அந்தப்போட்டியோடு முடிந்திருந்தால் பரவாயில்லை. காலிறுதி போட்டியிலும் தொடர்ந்துள்ளது. அதுதான் சிக்கலானது!

முதல் போட்டியில் தான் ஓரங்கட்டபோதுகூட ரொனால்டோ அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. `போர்ச்சுகலுக்கு வலிமை சேரட்டும்’ எனக்கூறி கடந்துசென்றார். அப்படிப்பட்ட ரொனால்டோதான், தற்போது கதிகலங்கி போயுள்ளார். ஏனெனில் போர்ச்சுகல் அணி மொத்தமாக வெளியே போய்விட்டது. இனி இந்த உலகக்கோப்பை அவர்களுக்கானதல்ல. ரொனால்டோவுக்கோ, இனி உலகக்கோப்பையே இல்லை என்றாகிவிட்டது. இதுதான் அவரை அந்த மைதானத்தில் அப்படி உடைந்து அழச்செய்தது. அத்தனை அழுகைக்குப்பின்னரும், அவரால் அதிலிருந்து வெளிவர முடியாத நிலை என்றே சொல்லலாம். “உலகக் கோப்பையை வெல்வது என்பது என்னுடைய வாழ்வின் மிகப்பெரிய லட்சிய கனவு. ஆனால், வருத்தம் கொள்ளும் வகையில் என்னுடைய கனவு முடிவுக்கு வந்துள்ளது” என ரொனால்டோ தற்போது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டா பதிவில், “போர்ச்சுகல் நாட்டிற்காக உலகக் கோப்பையை வெல்வது என்பது என்னுடைய வாழ்வின் மிகப்பெரிய லட்சிய கனவு. சர்வதேச அளவில் போர்ச்சுகல் அணிக்காக நிறைய கோப்பைகளை வென்றிருக்கிறேன். ஆனால், உலகக் கோப்பையில் போர்ச்சுகல் பெயரை பொறிப்பது என்பது என்னுடைய மிகப்பெரிய கனவு. அதற்காக நான் போராடினேன். என்னுடைய கனவிற்காக மிகக் கடுமையாக போராடினேன்.

கடந்த 16 ஆண்டுகளில் 5 முறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ள நான், என்னால் ஆன அனைத்தையும் கொடுத்தேன். என்னுடைய கனவையும், போராட்டத்தையும் ஒருபோதும் கைவிட்டதில்லை. ஆனால், வருத்தம் கொள்ளும் வகையில் என்னுடைய கனவு முடிவுக்கு வந்துள்ளது. இந்த நேரத்தில் எப்படி எதிர்வினை ஆற்றுவது என்றே தெரியவில்லை. எவ்வளவோ எழுதப்பட்ட பிறகும், எவ்வளவோ பேசப்பட்ட பிறகும் என்னுடைய எண்ணத்தில் உறுதியாக இருந்து போர்ச்சுகலுக்காக நின்றேன். இந்த நேரத்தில் நிறைய பேசமுடியவில்லை. நன்றி போர்ச்சுகல். கத்தாருக்கு நன்றி. இந்த கனவு நீடித்திருந்த வரை அழகாக இருந்தது. காலம் ஒவ்வொருவருக்கும் இறுதியான முடிவுகளை எடுக்க உதவும்” என பதிவிட்டுள்ளார். அவர் என்ன இறுதியான முடிவுகளை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி: ரொனால்டோ இன்ஸ்டோ பதிவு!

ரொனால்டோவின் இந்த கண்ணீருக்கும், போர்ச்சுகலின் தோல்விக்கும் சேர்த்து, தற்போது டார்கெட் செய்யப்படுபவர் போர்ச்சுகல் அணியின் கோச் சாண்டோ. ரொனால்டோ இந்த ஆட்டத்தில் உள்ளே இறக்கப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போதும், சாண்டோ அந்த நம்பிக்கையை உடைத்துக்கொண்டே வந்தார். ரொனால்டோவை சப்ஸ்டிட்யூட்களுக்கான பயிற்சியை மேற்கொள்ள அறிவுறுத்தினார். ரொனால்டோதான், அதை ஏற்காமல் வழக்கம் போல் பயிற்சி எடுத்தார். இதுபற்றி சாண்டோ கூறுகையில், “எனக்கு என்ன யுக்தி சரியென்று படுகிறதோ எதை நான் நம்புகிறேனோ அதையே களத்தில் பயன்படுத்துவேன். இதுவரை என் வாழ்நாள் முழுவதும் இதனையே பின்பற்றி வந்துள்ளேன்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால், பயிற்சியாளர் உடனான ரொனால்டோவின் பனிப்போர் முற்றியதாகவும் சிலர் கூறினர். இச்சூழலில்தான் காலிறுதியிலும் ரொனால்டோ இறக்கப்படாமல், போர்ச்சுகல் வெளியேறியுள்ளது மொத்தமாக.

உலகக்கோப்பை வரலாற்றில் 5 முறை விளையாடிய ரொனால்டோ இதுவரை பென்சில் அமர வைக்கப்பட்டதில்லை என்ற நிலையை மாற்றிய சாண்டோவின் செய்கை ரொனால்டோவை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். அதன்பின்னரும் தற்போது காலிறுதியில் அவரை உள்ளே இறக்காதது... அதிலும் போட்டியில் தோற்றது போன்றவையாவும் ரொனால்டோவை இன்னும் ஏமாற்றத்துக்கே தள்ளியிருக்கும் என்கின்றனர் ரசிகர்கள். யாருக்கு எப்படியோ... இப்போது போட்டியில் தோற்று வெளியேறிய பின்னரும்கூட, கோச் சாண்டோ அதை மனநிலையில்தான் உள்ளார். அவருக்கு ரொனால்டோவின் வேதனை எளிமையாகவே இருக்கிறது. போட்டியில் தோற்ற பின்னான போட்டியில் அவர், “நான் எந்த தவறும் செய்ததாக நினைக்கவில்லை. ரொனால்டோ எப்போது தேவையென்று நினைத்தோமோ, அப்போதே களமிறக்கினோம். அது சரியென்றே நினைக்கின்றேன். இதே அணியை வைத்துதான் சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற்றோம்” என்று பேசியுள்ளார். 

சாண்டோவின் இக்கருத்து பலரிடமிருந்தும் எதிர்ப்பை பெற்றுள்ளது. `உங்கள் நண்பரும், கோச்-சும் ஆன அந்நபர் இன்று தவறான முடிவை எடுத்துள்ளார். அதனால் இன்று நாம் இழக்கவில்லை; கற்றுக்கொண்டிருக்கிறோம்’ என்று ரொனால்டோவின் காதலியேவும் கூறியிருக்கிறார். ரொனால்டோவும் மிகவும் மனம் உடைந்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.

<blockquote class="twitter-tweet"><p lang="es" dir="ltr">Te amamos Cristiano <a href="https://t.co/5nplkUa3FZ">pic.twitter.com/5nplkUa3FZ</a></p>&mdash; Georgina Rodríguez (@_georginagio) <a href="https://twitter.com/_georginagio/status/1601660800023744513?ref_src=twsrc%5Etfw">December 10, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இவையாவும், கால்பந்தாட்ட ரசிகர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது. ரொனால்டோவின் கனவுகள், இப்படி தகர்ந்திருக்க வேண்டாம் என பலரும் கூறிவருகின்றனர். இனி ரொனால்டோ விளையாடுவாரா, இல்லை ஓய்வை அறிவிப்பாரா என்று பலரும் யூகங்களை சொல்லி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் ரொனால்டோவே ஒரு பேட்டியில் சொன்னதை மறுபடியும் சொல்கிறோம்! 

கணிப்புகளைச் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. கால்பந்தில் எல்லா நேரங்களிலும் விஷயங்கள் மாறுகின்றன. பார்ப்போம், அடுத்து நடப்பதை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com