உலகக் கோப்பை தொடரில், ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில், கிறில் கெயிலுக்கு கொடுக்கப்பட்ட அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 10வது போட்டியில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து, 288 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் என்ற நிலையில் தடுமாறிக்கொண்டிருந்த அந்த அணியை, ஸ்மித்தும் கோல்டர் நைலும் அதிரடியாக விளையாடி, தூக்கி நிறுத்தினர். இதனால் அந்த அணி, கவுரமான ஸ்கோரை எட்டியது.
பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 273 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஹோல்டரும் ரஸலும் களத்தில் இருந்தபோது வெஸ்ட் இண்டீஸ் அணி வென்று விடும் என்ற நிலையிலேயே இருந்தது. ஆனால், அவர்கள் விக்கெட்டை இழந்ததும் ஆட்டத்தின் போக்கு மாறிவிட்டது.
இந்தப் போட்டியின்போது நடுவர்கள் அநியாயத்துக்கு தவறுகள் செய்தனர். கிறிஸ் கெய்ல் பேட்டிங் செய்யும் போது இரண்டு முறை தவறாக அவுட் கொடுத்தனர். பிறகு டிஆர்எஸ்-சில் முறையிட்டு தப்பினார். அவர் மூன்றாவது முறையாக, ஸ்டார்க் வீசிய பந்தில் எல்.பி.டபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
ஸ்டார்க் வீசிய அந்த பந்துக்கு முந்தையப் பந்து, நோ பாலாக அமைந்தது. அதை நடுவர் கவனிக்கவில்லை. நடுவர் அதைக் கவனித்து நோபால் என அறிவித்திருந்தால் அடுத்த பால் ப்ரீ ஹிட்டாக கிறிஸ் கெய்லுக்கு அமைந்திருக்கும். அதில் ஆட்டமிழந்திருந்தாலும் அது செல்லாது என்பதால் கெய்ல் தப்பித்திருப்பார். ஆனால் நடுவர்களின் மோசமான செயலால் கெய்ல் ஆட்டமிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வெஸ்ட் இண்டீஸின் வெற்றியும் நூலிழையில் கைவிட்டுப் போனது.
அதே போல வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பவுன்சர் வீசியபோது வைட், நோபால் என கொடுத்த நடுவர்கள், ஆஸ்திரேலிய வீரர்கள் பவுன்சர் வீசியபோது எதுவும் கொடுக்கவில்லை.
இதையடுத்து நடுவர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக நடந்துகொண்டதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.