சாஹல் மீது சாதிய ரீதியான விமர்சனம்: யுவராஜ் சிங் மீது போலீஸார் வழக்கு !

சாஹல் மீது சாதிய ரீதியான விமர்சனம்: யுவராஜ் சிங் மீது போலீஸார் வழக்கு !
சாஹல் மீது சாதிய ரீதியான விமர்சனம்: யுவராஜ் சிங் மீது போலீஸார் வழக்கு !
Published on


இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் மீது முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சாதிய ரீதியிலான கருத்தைத் தெரிவித்ததால் அவர் மீது காவல்துறையினர் வழக்குத் தொடுத்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இருப்பவர் யுவராஜ் சிங். தோனியைப் போன்று இவருக்கும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. இவரது அதிரடி பேட்டிங்கால் தான் 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. அத்துடன் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும் யுவராஜ் சிங் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்தினார். இந்த முறையும் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.

சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற யுவராஜ் சிங், அவ்வப்போது தனது மனம் திறந்து பேசக்கூடியவர். இப்போது ஊரடங்கு காலம் என்பதால் பல கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் உரையாடி வருகின்றனர். இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் மீது சாதிய வன்மத்துடன் யுவராஜ் சிங் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சமூகவலைத்தளங்களில் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

ரோகித் சர்மாவும் யுவராஜ் சிங்கும் இன்ஸ்டாகிராமில் அண்மையில் உரையாடினார்கள். அப்போது யுவராஜ் சிங், சாஹல் மற்றும் குல்தீப் யாதவ்வை குறிப்பிட்டு சாதிய ரீதியிலான வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சாஹலின் டிக்டாக் வீடியோக்களைப் பற்றி ரோஹித் சர்மாவிடம் கிண்டலாகப் பேசினார் யுவராஜ் சிங். ரோஹித் சர்மாவும் அதைச் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டார். யுவராஜ் சிங் பேசுகையில், வட இந்தியாவில் குறிப்பிட்ட மக்களைக் குறிப்பிடும் ஒரு வார்த்தையைச் சொல்லி சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் பற்றிப் பேசியுள்ளார். அதுதான் இப்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

இந்தச் சர்ச்சை தொடர்பாக யுவராஜ் சிங் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில், இந்த விவகாரம் காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளது. ரஜத் கல்சன் என்பவர் இந்த விவகாரத்தில் யுவராஜ் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹரியானா மாநிலம் ஹிசார் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை, யுவராஜ் சிங் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com