கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பல்வேறு கட்டுப்பாடுகளை வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு விதித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.
வீரர்கள், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் என ஐபிஎல் தொடரில் அங்கம் வகிக்கும் அனைவரும் பயோ பபுளில் உள்ளனர். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கொரோனா பரிசோதனை, கை குலுக்குவதற்கு தடை என பல்வேறு விதிமுறைகளை இந்த பயோ பபுளில் உள்ளவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பயோ பபுளில் உள்ள வீரர்கள் விதிமுறைகளை மீறி வருவதாக சொல்லப்பட்டு வருகிறது.
அதனையடுத்து பயோ பபுள் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பி.சி.சி.ஐ.
கட்டுப்பாட்டு விதிமுறைகளை முதல் முறை மீறும் வீரர்கள் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். தொடர்ந்து இரண்டாவது முறையாக மீறும் போது ஒரு போட்டியில் விளையாட தடை, அறுபதாயிரம் ரூபாய் அபராதம் மற்றும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
மூன்றாவது முறையாக அதே தவறை செய்யும் போது எஞ்சியுள்ள போட்டிகளில் அந்த வீரர் விளையாட தடை விதிக்கப்படுவதோடு அவருக்கு மாற்றாக வேறொரு வீரரை அணியில் சேர்க்கவும் கூடாது என சொல்லியுள்ளது பி.சி.சி.ஐ.