தோனியை அன்போடு பின்னாலிருந்து ‘ஹக்’ செய்த கோலி - இணையத்தில் வைரலாகும் போட்டோ
அனல் பறந்த ஷார்ஜா மைதானத்தில் நேற்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஆனால், போட்டியைத் தாண்டி இன்று அதிகம் பேசப்படுவது முன்னாள் கேப்டன் தோனி, இந்நாள் கேப்டன் விராட் கோலி இடையிலான நட்பு குறித்துதான்.
போட்டி தொடங்கும் முன்பே...
சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டி புழுதிப் புயல் காரணமாக சற்று நேரம் தாமதமாக தொடங்கியது. இதனால், டாஸ் போடுவதற்கு தாமதமானது. இருப்பினும், மைதானத்திற்கு வந்திருந்த விராட் கோலியும், மகேந்திர சிங் தோனியும் அந்த இடைப்பட்ட நேரத்தில் மிகவும் மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தனர். வழக்கம் போல் தோனி ஏதோ பாடம் எடுப்பது போன்று விளக்குவது போன்று கைகளை அழகாக அசைத்து அசைத்து கோலியிடம் பேசிக்கொண்டிருந்தார். விராட் கோலியும் மெய் மறந்து அதனை கேட்டுக் கொண்டிருந்ததோடு இடையிடையே அவரும் கருத்துக்களை தோனியிடம் பகிர்ந்து கொண்டார். இது இரு வீரர்களின் ரசிகர்களுக்கும் விருந்தாக அமைந்தது.
மைதானத்தில் நட்பு பாராட்டிய சிஎஸ்கே - ஆர்சிபி வீரர்கள்
ஐபிஎல் போட்டி என்றால் வீரர்களின் ஆக்ரோஷத்திற்கு பஞ்சம் இருக்காது. எல்லா வீரர்கள் இல்லை என்றாலும், பல வீரர்கள் எதிரணியுடன் ஏதேனும் ஒரு சேட்டையில் ஈடுபட்டு விடுவார்கள். ஆனால், நேற்றைய போட்டியில் அப்படி ஒன்றுமே நடைபெறவில்லை. தொடக்கத்தில் சிஎஸ்கே பந்துவீச்சை விராட் கோலியும், பட்டிகல்லும் பொளந்து கட்டிய போதும் சிஎஸ்கே வீரர்கள் சிரிந்துக் கொண்டே எதிர் கொண்டனர். அப்படிதான், அவர்களின் விக்கெட் சீட்டுக் கட்டு போல் சரிந்த போதும். இறுதியில், தோனியும், ரெய்னாவும் இணைந்து வெற்றிக்கான ரன்களை எடுத்து ஆட்டத்தை முடித்தனர். வெற்றி பெற்ற போதும் எந்தவித கொண்டாட்டத்தையும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை. மிக இயல்பாகவே இருவருமே பெவிலியன் திரும்பினர்.
தோனியை ஹக் செய்த கோலி
போட்டி முடிந்த பிறகு தோனி தன்னுடைய அணியின் சக வீரர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விராட் கோலி தோனியை பின்னாள் இருந்து நட்புடன் கட்டிப் பிடித்து அன்பை வெளிப்படுத்தினார். பின் எல்லோரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 14 ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அதிரடிக்கு பெயர் பெற்ற ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னையின் கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணிக்கு அந்த அணியின் கேப்டன் கோலி மற்றும் படிக்கல் ஜோடி அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. சுதாரித்து பந்து வீசிய சிஎஸ்கேவின் ஜடேஜா, பிராவோ மற்றும் ஷர்தூல் தாக்கூர் ஆகியோர் ஆர்சிபியின் ரன் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டனர். கோலி 53 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் வந்த அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ் 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார். சீரான வேகத்தில் ரன்களைச் சேர்த்த படிக்கல்லும் 70 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். பின்னர் வந்த மேக்ஸ்வெல், டிம் டேவிட் உள்ளிட்டோர் பெரிதளவில் சோபிக்கவில்லை. இதையடுத்து பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது.
157 இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே
157 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க வீரர்கள் ருத்துராஜ் மற்றும் டூபிளசி இணை சிறப்பான அடித்தளமிட்டது. ருத்துராஜ் 38 ரன்களும், டூபிளசி 31 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த மொயின் அலி, அம்பத்தி ராயுடு ஆகியோரும் ரன் ரேட் குறையா வண்ணம் ரன்களைச் சேர்த்தனர். 2 சிக்ஸர்கள் உட்பட 23 ரன்கள் சேர்த்து மொயின் அலி பெவிலியன் திரும்ப, ராயுடு 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சென்னை அணியின் வின்டேஜ் ஜோடியான ரெய்னா மற்றும் கேப்டன் தோனி, 18.1 ஓவர்களின் போது சென்னை அணியை வெற்றிப்பாதைக்குள் அழைத்துச் சென்றனர்.
இதன்மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்திற்கு முன்னேறியது. அமீரக மண்ணில் சென்னை அணி தொடர்ச்சியாக பதிவு செய்யும் 5 ஆவது வெற்றி இதுவாகும். முத்தான 3 விக்கெட்டுகளைச் சரித்த பிராவோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த சீசனில் அமீரக மண்ணில் ஆட்டம் கண்ட சிஎஸ்கே, இம்முறை பொறுப்பான ஆட்டங்களின் மூலம் வலுவான அணியாக வலம் வருவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.