நன்றாக விளையாடிய 10 நாட்களை மறந்துவிட்டு, சரியாக விளையாடாத ஒரு நாளையே ரசிகர்கள் குறிப்பிடுவார்கள் என ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
கடந்த 18ஆம் தேதி உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்து 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 9 ஓவர்கள் வீசி 110 ரன்களை வாரிக்கொடுத்தார். இதனால் சமூக வலைத்தளங்களில் அவரை ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். இதுதொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் ரஷித் கான் மவுனம் காத்து வந்தார்.
இந்நிலையில் தான் 110 ரன்கள் கொடுத்தது தொடர்பாக எழுந்துள்ள விமர்னங்களுக்குப் பதிலளிக்க அவர் வாய் திறந்துள்ளார். அவர் கூறும்போது, “110 ரன்கள் கொடுத்தது தொடர்பாக நான் பெரிதும் யோசிக்க விரும்பவில்லை. ரசிகர்கள் நான் நன்றாக விளையாடிய 10 நாட்களை மறந்துவிடுவார்கள். ஆனால் சரியாக விளையாடாத ஒரு நாளை குறிப்பிட்டு குறைக் கூறுவார்கள்.
அவர்கள் 110 ரன்கள் கொடுத்ததற்கு முந்தைய 10 நாட்களில் ரஷித் கான் என்ன செய்தார் என்பதை நினைக்கமாட்டார்கள்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் எனது தவறுகளில் கவனம் செலுத்தப்போகிறேன். அதை உணர்ந்து அடுத்த போட்டிகளில் திருத்திக்கொள்வேன். என் மீதான விமர்சனங்கள் குறித்து சிந்திக்கப் போவதில்லை. அதனை எளிமையாக எடுத்துக்கொள்ளப் போகிறேன். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு எதிராக விளையாடும் போது பிரஷர் இருக்கும். அதிலும் உலகக் கோப்பை என்றால் கூடுதலான பிரஷர் இருக்கும். அந்த பிரஷர் நமது விளையாட்டை பாதிக்கும்” எனத் தெரிவித்தார்.