இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் சுயசரிதை எழுதுகிறார். இந்தப் புத்தகம் அடுத்த ஆண்டு வெளியாகிறது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர். பேட்டிங்கில் 51.58 சராசரி வைத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து 7 போட்டிகளில் அரை சதம் கடந்த முதல் வீராங்கனை. 2005 மற்றும் 2017 வருடங்களில் நடந்த உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணியை இறுதி போட்டி வரை கொண்டு சென்ற முதல் கேப்டன். 19 வயதில் அர்ஜூனா விருது வாங்கிய இவர், கடந்த 2015ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.
இவர், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் பற்றி சுயசரிதை எழுத உள்ளார். இந்த சுயசரிதை புத்தகத்தை பெங்குயின் புத்தக நிறுவனம் வெளியிடுகிறது. அடுத்த ஆண்டு இது வெளியாகும். இதுபற்றி மித்தாலி ராஜ் கூறும்போது, ’எனது சுயசரிதையை எழுதுவதில் மகிழ்ச்சி. இதை பகிர்ந்துகொள்வதில் உற்சாகமாக இருக்கிறேன். இதை மக்கள் விரும்புவார்கள் என நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.