விசாரணை வளையத்திற்குள் வருகிறாரா பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன்?

விசாரணை வளையத்திற்குள் வருகிறாரா பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன்?
விசாரணை வளையத்திற்குள் வருகிறாரா பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன்?
Published on

இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்த வழக்கில் பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனிடம் ரயில்வே எஸ்.பி நேரடி விசாரணை.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள காடையாம்பட்டி ஒன்றியத்தில் பெரியவடகம்பட்டி கிராமம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மூர்த்தி-முனியாம்மா தம்பதியின் இளைய மகன் சதீஷ்குமார். இவர் லாரி ஓட்டுனராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் டேனிஷ்பேட்டை ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் பிணமாக இறந்து கிடந்தார். இதுகுறித்து சேலம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், தங்களது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் இறந்த சதீஷ்குமாரின் தாய் முனியம்மா ரயில்வே போலீஸில் மீண்டும் ஒரு புகார் கொடுத்திருந்தார். 

இதையடுத்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார் வழக்கை ஓமலூர் சரகத்தில் உள்ள தீவட்டிபட்டி காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வழக்கில் முறையாக விசாரணை நடத்தவில்லை எனவும், ரயில்வே போலீசாரே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரயில்வே ஐ.ஜி பொன்.மாணிக்கவேலிடம் சதீஷ்குமாரின் தாய் புகார் மனு கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட அவர், வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தார். பின்னர், தீவட்டிபட்டி காவல் நிலையத்திற்கு வழக்கை ஏன் மாற்றினீர்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், 30 சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்தி விசாரணை நடத்துமாறு ரயில்வே எஸ்.பி.ஜோர்ஜி ஜார்ஜிக்கு உத்தரவிட்டார். 

இதனை தொடர்ந்து ரயில்வே எஸ்.பி.ஜோர்ஜி ஜார்ஜ் சேலம் ரயில்வே காவல் நிலையத்திற்கு வந்தார். மகன் சதீஷ்குமாரை இழந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அழைத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார். சதீஷ்குமார் இறந்துக் கிடந்த படங்களையும், அவரது உடலில் ஏற்பட்டுள்ள காயங்களையும் பார்த்தார். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையையும் ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பாரா ஒலிம்பிக் வீரர் தங்க மாரியப்பனிடமும், அவரது நண்பர்கள் சபரி, யுவராஜ் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்த எஸ்.பி.ஜோர்ஜி ஜார்ஜ் முடிவு செய்துள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர். மேலும், பிரச்னை நடந்தபோது மாரியப்பனின் நடவடிக்கைகள் குறித்து கிராம மக்களிடமும் ரகசியமாக விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com