கோலாகலம் பூண்ட பாரிஸ் நகரம்... இன்று தொடங்குகிறது பாராலிம்பிக் போட்டிகள்!

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் பாராலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
பாராலிம்பிக்
பாராலிம்பிக்கோப்புப்படம்
Published on

பாரிஸ் நகரில் இன்று தொடங்கும் 17வது பாராலிம்பிக் தொடர் செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பாராலிம்பிக் விளையாட்டுகளின் பிறப்பிடமாக கருதப்படும் லண்டனில் உள்ள ஸ்டோக் மாண்டேவில்லில் பாரா ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு, பிரான்சுக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில், பாரிஸ் வீதிகளில் விளையாட்டு பிரபலங்கள் ஜோதியை ஏந்தியப்படி சென்றனர்.

பாராலிம்பிக் தொடருக்கான தொடக்க விழா வரலாற்று சிறப்புமிக்க இடமான பிளேஸ் டி லா கான்கார்ட்டில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், போட்டிகளை காண உலகம் முழுவதும் இருந்து ஏராளமான விளையாட்டு ஆர்வலர்கள், ரசிகர்கள், சுற்றுலா பயணிகள் பாரிஸ் நகரில் குவிந்து வருகின்றனர்.

பாராலிம்பிக் தொடரில் மாற்றுத்திறனாளிகள், நிரந்தர காயமுற்றவர்கள், உடல் உறுப்பு குறைபாடுடைய 4,400 வீரர், வீராங்கனைகள் 22 விதமான போட்டிகளில் 549 பதக்கங்களுக்காக பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பாரிஸ் பாராலிம்பிக்கில் கலந்து கொள்கின்றனர். கடந்த முறை 38 பேர் கொண்ட குழு சென்று, 19 பதக்கங்களை பெற்றது. தற்போது அதிக வீரர், வீராங்கனைகள் செல்வதால் பதக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தை சேர்ந்த தங்கவேல் மாரியப்பன், சிவராஜன், நித்திய ஸ்ரீசிவன், வீராங்கனைகள் மனிஷா ராமதாஸ், துளசி முருகேசன், கஸ்தூரி ராஜாமணி ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் சிலர் ஏற்கனவே பாராலிம்பிக், சர்வதேச போட்டிகள் பதக்கங்களை குவித்திருக்கும் நிலையில், தற்போதும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் 6 பதக்கங்களை மட்டுமே இந்தியா பெற்ற நிலையில், அப்போது தவறவிட்ட வாய்ப்பினை தற்போது பயன்படுத்திக் கொண்டு பதக்கங்களை குவிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பாராலிம்பிக்
இமானே கெலிஃப் பாலின விவகாரம்| ‘உசைன் போல்ட்டை ஏன் தடைசெய்யவில்லை?’ நடிகை டாப்ஸி கேள்வி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com