பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய இளம் மங்கை அவனி லெகராவுக்கு, மஹிந்திரா நிறுவனம் எஸ்.யூ.வி.700 கோல்ட் எடிசன் காரை பரிசாக அளித்துள்ளது.
கடந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில், 10 மீட்டர் ஏர்ரைபிள் எஸ்.எச்1 எனும் துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த அவனி லெகரா, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்தப் பிரிவில் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுதந்தவர் என்றப் பெருமையையும், அவனி லெகரா பெற்றார். பாரா ஒலிம்பிக் போட்டியில், 10 மீட்டர் ஸ்டாண்டிங் எஸ்.எச்1 துப்பாக்கி சுடுதல் பிரிவில், 249.6 புள்ளிகள் பெற்று புது சாதனையும் படைத்தார்.
இந்நிலையில், விளையாட்டு உள்பட பல துறைகளில் வித்தியாசமாக சாதனை படைக்கும் நபர்களுக்கு, மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனம் கார்களை பரிசளிப்பதை வழக்கமாக வைத்துள்ளது. அந்தவகையில், ஏற்கனவே அறிவித்தப்படி, மாற்றுத் திறனாளிகள் இயக்கும் வகையில் சிறப்பான அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் கூடிய, மஹிந்திரா எஸ்.யூ.வி.700 கோல்ட் எடிசன் காரை மஹிந்திரா நிறுவனம், வீரமங்கை அவனி லெகராவுக்கு பரிசளித்துள்ளது. இதனை மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சென்ற ஆண்டு ஒலிம்பிக்பில் ஈட்டி எறிதல் போட்டியில் சாதித்த நீரஜ் சோப்ரா மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டியில் சாதித்த சுமித் பாட்டீல் ஆகிய இருவருக்கும் மஹிந்திரா எஸ்.யூ.வி.700 கோல்ட் எடிசன் கார் பரிசளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.