தம்பி ஹர்திக் பாண்ட்யாவுடன் சண்டை போட்டதாக வந்த செய்தி, ஆப் ஒன்றின் பப்ளிசிட்டிக்குத்தான் என்று அவரது அண்ணன் கிரிக்கெட் வீரர் குணால் பாண்ட்யா கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்காக ஆடிய குணால், ஹர்திக் பாண்ட்யா சகோதரர்கள், தங்களது அதிரடி ஆட்டம் மூலம் கவனிக்கப்பட்டனர். இதில் தம்பி ஹர்திக் பாண்ட்யா இப்போது இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் குணால் பாண்ட்யா கூறும்போது, ’நான்கு வருடத்துக்கு முன்பு வரை உள்ளூர்களில் நடக்கும் போட்டிகளில் ஆடி வந்தோம். ஒரு போட்டியில் விளையாடினால் ரூ. 400, அல்லது ரூ. 500 கிடைக்கும். ஆனால் அந்தப் போட்டிகளில் நாங்கள் அதிகமாகக் கற்றுக்கொள்ள முடிந்தது. அப்போது என் தந்தை எங்களுக்காக நிறைய தியாகம் செய்திருக்கிறார். ஆனால், இன்று அவர் பெருமை மிகுந்த தந்தையாக இருக்கிறார். என் தம்பி ஹர்திக் இந்திய அணியில் விளையாடி வருகிறார். நானும் அவருடன் இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்பது கனவு. அது கண்டிப்பாக நடக்கும்’ என்றார் குணால். அவரிடம், ஐபிஎல் போட்டியில், ஹர்திக்கிடம் சண்டை போட்ட விஷயம் பரபரப்பானது பற்றி கேட்டபோது, ’அது ஆப் ஒன்றுக்காக நடந்த பப்ளிசிட்டி சண்டைதான். இது ரோகித் சர்மா சொல்லிதான் எங்களுக்குத் தெரியும்’ என்றார் குணால்.