பாண்ட்யா, சாஹர் மிரட்டலில் மும்பைக்கு 6 வது வெற்றி!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இண்டியன்ஸ் அணி, ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடி மற்றும் சாஹரின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக 40 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 34-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ்- மும்பை இண்டியன்ஸ் அணிகள் டெல்லியில் நேற்று மோதின. முதலில் ஆடிய மும்பை அணி, 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா 35 ரன்னும் டி காக் 35 ரன்னும் எடுத்து சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். பின்னர் வந்த ஹர்திக் பாண்ட்யாவும் குணால் பாண்ட்யாவும் அதிரடியாக விளாசினர். ஹர்திக் பாண்ட்யா 15 பந்தில் 32 ரன் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். குணால் பாண்ட்யா 26 பந்தில் 37 ரன் சேர்த்தார். டெல்லி அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் களமிறங்கிய டெல்லி அணியில் பிருத்வி ஷாவும் (20) ஷிகர் தவானும் (35) சிறப்பாக ஆடினர். அவர்கள் ஆட்டமிழந்ததும் மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. முன்றோ 3, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 3, ரிஷாப் பன்ட் 7 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, போட்டி மும்பையின் பக்கம் திரும்பியது. இறுதியில் அக்ஷர் பட்டேல் 26 ரன்னும் மோரிஸ் 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் டெல்லி அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதையடுத்து 40 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் சுழல் பந்துவீச்சாளர் ராகுல் சாஹர் 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
9 லீக் போட்டியில் விளையாடியுள்ள மும்பை அணிக்கு இது 6 வது வெற்றி. இதையடுத்து 12 புள்ளிகளுடன் பட்டியலில் 2 வது இடத்தை பெற்றுள்ளது. டெல்லி அணிக்கு இது நான்காவது தோல்வி.