தென்னாப்பிரிக்க ஏ கிரிக்கெட் அணி மற்றும் ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலிய ஏ அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய ஏ அணி, 31.4 ஓவர்களில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட் டையும் இழந்தது. அதிகப்பட்சமாக அந்த அணியின் ஆஸ்டன் அகர் 34 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்ட மிழந்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும் கிருஷ்ணப்பா கவுதம் 3 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இந்திய ஏ அணி, 38.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிடில் ஆர்டரில் களமிறங்கிய அம்பத்தி ராயுடு அபாரமாக ஆடி 62 ரன்கள் சேர்த்தார். குணால் பாண்ட்யா 49 ரன்கள் எடுத்தார்.
தென்னாப்பிரிக்க ஏ அணியுடனான மற்றொரு போட்டியில் இந்திய பி அணி நேற்று மோதியது. பெங்களூர் அருகே உள்ள அலூரில் இப்போட்டி நடந்தது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க ஏ அணி, 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 231 ரன்கள் எடுத்தது. ஆல்ரவுண்டர் முத்துசாமி 55 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளையும் ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அடுத்து களமிறங்கிய இந்திய பி அணி 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பின்னர் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிகப்பட்சமாக மனீஷ் பாண்டே 95 ரன்களும் சுப்மான் கில் 42 ரன்களும் எடுத்தனர்.