பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டித் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது. அடுத்து டி-20 தொடர் நடக்கிறது. முதல் டி-20 போட்டி, லாகூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குணதிலகா 57 ரன்களும் பெர்னாண்டோ 33 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது ஹஸ்னைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இலங்கை வேகப்பந்துவீச்சாளர்கள் உதனா, பிரதீப் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுக்கு முன் அவர்களால் ரன் எடுக்க முடியவில்லை. வருவதும் போவதுமாக இருந்ததால் அந்த அணி 17.4 ஓவரில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணியின் உதனா, பிரதீப் தலா 3 விக்கெட்டுகளையும் டி சில்வா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.