உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் வரும் ஞாயிற்றுகிழமை மோதவுள்ள நிலையில் பாகிஸ்தான் டிவி வெளியிட்டுள்ள விளம்பரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உலகக் கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான இந்தியா-பாகிஸ்தான் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை தொடரின் ஆரம்பத்திற்கு முன்பே டிக்கெட் விற்பனையில் சாதனையை அடைந்த இந்தப் போட்டி ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் எப்போதும் உலக கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் உற்று நோக்கக் கூடிய போட்டியாக இருக்கும்.
இந்நிலையில் இந்தப் போட்டி தொடர்பாக பாகிஸ்தான் டிவி ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அதில் ஒருவர் இந்திய விமானப்படையின் விங் காமாண்டர் அபிநந்தனை போல் மீசையை வைத்துகொண்டு வருகிறார். அவரிடம் இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்தியாவின் உத்தி என்ன? என்று கேட்கப்படும் கேள்விக்கு அவர் இதுகுறித்து நான் உங்களிடம் கூறமுடியாது என்று கூறுகிறார். இந்த விளம்பரத்தின் இறுதியில் ‘#LetsBringTheCupHome’என்னும் வாசகம் வருகிறது.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் அவர்கள் விளம்பரத்தை நோக்கம் குறித்தும் பலர் பதிவிட்டுவருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக இந்திய தரப்பில் பாலாகோட் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது பாகிஸ்தானின் எஃப்-16 ரகவிமானத்தை சுட்டு வீழ்த்தும் போது இந்தியாவின் விங் காமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். இதனைத் தொடர்ந்து அவர் டீ அறுந்துவது போல ஒரு போலி விடியோ பரப்பப்பட்டது. அந்தப் போலி வீடியோவை தழுவியே இந்த விளம்பரம் சித்தரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.