தான் ஒரு இந்து என்பதால் தன்னுடன் பேச மறுத்த வீரர்கள் குறித்த விவரத்தை வெளிப்படுத்துவேன் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா. இந்துவான இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று அந்நாட்டிற்காக விளையாடியவர். இதனிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிர் அக்தர் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார்.
அதாவது டேனிஷ் கனேரியா ஒரு இந்து என்பதால் அவரிடம் சக கிரிக்கெட் வீரர்கள் பாகுபாடு காட்டினர் என தெரிவித்திருந்தார். அத்துடன் சில பாகிஸ்தான் வீரர்கள், டேனிஷ் கனேரியாவுடன் ஒரே டேபிளில் ஒன்றாக உணவருந்த கூட மாட்டார்கள் எனவும் கூறியிருந்தார். டேனிஷ் கனேரியா எவ்வளவுதான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் கூட எந்தவொரு பாராட்டோ, அங்கீகாரமோ கிடைக்காது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள டேனிஷ் கனேரியா, “ நான் இந்துவாக இருப்பதால் என்னுடன் சக வீரர்கள் உணவருந்தமாட்டார்கள் என சோயிப் அக்தர் கூறியது உண்மைதான். நான் இந்து என்ற ஒரே காரணத்திற்காக என்னுடன் சில வீரர்கள் பேச மறுத்தனர். அந்த வீரர்கள் குறித்த விவரத்தை வெளிப்படுத்த முன்பு தைரியம் இல்லை. ஆனால் அதனை தற்போது வெளிப்படுத்த தைரியம் இருக்கிறது” எனக் கூறினார்.