வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜமைக்காவில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் வென்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 110 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 302 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 51.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கிருமா போனர் 6 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் ஷா அஃப்ரிதி 6, முகமது அப்பாஸ் 3, ஃபஹீம் அஷ்ரஃப் 1 விக்கெட் சாய்த்தனர்.
பின்னா் முதல் இன்னிங்ஸில் 152 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான், 27.2 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் அடித்து டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக இம்ரான் பட் 5 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னா் 329 ரன்களை இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷாஹீன் அப்ரிதி அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் வென்ற நிலையில், இப்போது இரண்டாவது போட்டியை பாகிஸ்தான் வென்றுள்ளது.