ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. மெல்பர்ன் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
சூப்பர் 12 சுற்றில் தடுமாறி அரையிறுதியில் நுழைந்த இங்கிலாந்து அணி, இந்தியாவை வீழ்த்தி அதிரடியாக இறுதிக்குள் நுழைந்தது. அதேபோல லீக் போட்டிகளில் சொதப்பிய பாகிஸ்தான், தென்னாப்பிரிக்காவின் தோல்வி காரணமாக அரையிறுதியில் நுழைந்தது. ஆனால் அரையிறுதியில் பலம் வாய்ந்த நியூசிலாந்தை அசால்ட்டாக வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது.
இந்த இரு அணிகளும் அப்படி இப்படியாக தொடரின் தொடக்கத்தில் விளையாடினாலும் அரையிறுதியில் "அட நாங்க செம்ம டீம் பாஸ்" என கெத்து காட்டினார்கள். இந்த இரு அணிகளும் இதுவரை 28 முறை சர்வதேச டி20 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் பாகிஸ்தான் 9 முறையும், இங்கிலாந்து 17 முறையும் வெற்றிபெற்றுள்ளன. டி20 உலகக் கோப்பைகளில் இரு அணிகளும் 2 முறை மட்டுமே மோதியிருக்கின்றன. அதில் 2 முறையும் இங்கிலாந்தே வெற்றியை ருசித்துள்ளது.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் டெரராக இருந்திருக்கிறார் பாகிஸ்தானின் அற்புத பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான். அந்த அணிக்கு எதிரான 11 போட்டிகளில் 522 ரன்களை குவித்துள்ளார். அவரின் ஆவரேஜ் 58, ஸ்டிரைக் ரேட் 134.88. அதில் மொத்தம் 6 முறை அரை சதமும், அதிகபட்சமாக ஒரு போட்டியில் ஆட்டமிழக்காமல் 88 ரன்களை விளாசி இருக்கிறார். இங்கிலாந்து வேகப்பந்தை சிதறவிட காத்திருக்கிறார் முகமது ரிஸ்வான்.
இந்தியாவை ஓடவிட்ட இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை விளாசுவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியில் அதிக ரன்கள் அடித்தவரும் அலெக்ஸ் ஹேல்ஸ்தான். மொத்தம் 211 ரன்களை அடித்துள்ள ஹேல்ஸின் ஆவரேஜ் 52.75 ஆக இருக்கிறது. அவரது ஸ்டிரைக் ரேட் 148.59. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிக்ஸர்களை ராக்கெட் லாஞ்ச்சாக மாற்றிய ஹேல்ஸ், பாகிஸ்தானுக்கு எதிராக ஏவுகணையே வீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றையப் போட்டியில் உத்தேச அணி இதுதான்...
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், பிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் கரண், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டன், அடில் ரஷீத்
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம், முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இஃப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம், நசீம் ஷா, ஹாரிஸ் ரஃப், ஷாஹீன் அஃப்ரிதி