இந்தியாவுக்கு எதிரான போட்டியில், ஒவ்வொரு விக்கெட் விழும்போதும், அதை வித்தியாசமாக கொண்டாட திட்டமிட்டிருந்த பாகிஸ்தான் வீரர்களின் ஆசைக்கு அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தடை விதித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரில், இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி, சவுதாம்ப்டன் நகரில் நடந்தது. இந்தப் போட்டியின் போது, விக்கெட் கீப்பர் தோனி, பாரா மிலிட்டரியின் பாலிடன் முத்திரை பதித்த கையுறைகளை அணிந்திருந்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் கிடைத்தன. சில மீடியா இதுபற்றி விவாதங்களையும் நடத்தின. இதற்கிடையே, தோனி தன் கையுறையில் இருக்கும் முத்திரையை நீக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வலியுறுத்தியது.
இந்நிலையில், தோனிக்கு ஆதரவாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு கருத்து தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் வாரியமும் அவருக்கு ஆதராக கருத்து தெரிவித்தது. ’’தோனியின் விக்கெட் கீப்பிங் கையுறையில் பதித்துள்ள முத்திரையுடன் உலக கோப்பை போட்டியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று முறைப்படி ஐசிசி-க்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறோம்’’ என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் தெரிவித்தார். பாகிஸ்தான் அமைச்சர் ஃபவத் செளத்ரி, தோனியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை, ஐசிசி நிராகரித்துவிட்டது.
இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திட்டமிட்டனர். வரும் 16- ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடக்கும் போட்டியின்போது ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தும் போது, வித்தியாசமான முறையில் களத்தில் கொண்டாட, அவர்கள் திட்டமிட்டனர். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதற்கு அனுமதி மறுத்துவிட்டது.
வீரர்கள் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசியல் ரீதியாக செயல்படக் கூடாது என்றும் இம்ரான் கான் அறிவுறுத் தியதாக, பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.