இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஆர்.பி.சிங் அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ஆர்.பி.சிங். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், 2005-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கினார். 2011-ம் ஆண்டுக்கு பிறகு அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட இவர், ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். இந் நிலையில் அவர் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘13 வருடத்துக்கு முன்பு இதே தினத்தில் (செப்.4) இந்திய அணிக்காக முதல் முறையாக கால்பதித்தேன். எனது வாழ்க்கையில் எப்போதும் மறக்க முடியாத தருணம் அது. இப்போது கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறேன். என் கிரிக்கெட் பயணத்துக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்.
14 டெஸ்ட்களில் விளையாடியுள்ள ஆர்.பி.சிங், 40 விக்கெட்டுகளும், 58 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 69 விக்கெட்டுகளும், 10 டி20 போட்டிகளில் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.