ஆசிய தடகளப் போட்டியில் 1500 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.யூ.சித்ரா பல போராட்டங்களுக்கே பிறகே வெற்றியை ருசித்துள்ளார்.
23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் கடைசி நாளான நேற்று பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனையான பி.யூ.சித்ரா 4 நிமிடங்கள் 14.56 விநாடிகளில் பந்தய இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ பந்தய கோட்டை நெருங்கும் நேரம் வரை எனக்கு பக்கத்திலேயே பக்ரைன் வீராங்கனை வந்துகொண்டிருந்தார். இது சற்று பதட்டத்தை ஏற்படுத்தியாகவே இருந்தது. அந்த வீராங்கனை தான் கடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் என்னை மூன்றாது இடத்திற்கு தள்ளியவர். அதனால் வெறி கொண்டு மிக கடினமாக ஓடி வெற்றிக் கோட்டை முதலாவதாக அடைந்தேன்” என கூறியுள்ளார். தற்போது ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்றிருப்பதன் மூலம் செப்டம்பரில் நடக்க உள்ள ஐஏஏஎஃப் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் தகுதியையும் பெற்றுள்ளார் சித்ரா.
கேரள மாநிலம் பாலக்கோட்டில் விவசாய கூலி தொழிலாளரருக்கு மகளாக பிறந்த பி.யூ.சித்ரா இந்த வெற்றியை மிக எளிதாக பெற்றுவிடவில்லை. வீட்டில் குடிகொண்டிருந்த வறுமையிலும் கடுமையான பயிற்சி, வாய்ப்பு வழங்க மறுக்கப்பட்டப்போது நீதிமன்றம் படியேறியது என அவர்பட்ட சிரமங்கள் ஏராளம்.
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வெல்வதும் சித்ராவுக்கு இது முதல்முறை அல்ல. கடந்த 2017-ஆம் ஆண்டு புவனேஸ்வரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியிலும் தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார். அப்போது பந்தய இலக்கை அவர் 4 நிமிடங்கள் 17.92 விநாடிகளில் கடந்தார். ஆனால் இந்தப் போட்டியில் பங்கேற்க அவருக்கு எளிதாக வாய்ப்பு கிடைத்தா என்றால், இல்லை என்பதே உண்மை.
2017-ஆசிய தடகள போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளின் பட்டியலை இந்திய தடகள சம்மேளனம் வெளியிட்டது. ஆனால் அதில் பி.யூ.சித்ராவின் பெயர் அதில் இடம்பெறவில்லை. பல பயிற்சிகளுக்கு பின்னரும் நமக்கு போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்வில்லையே என எண்ணிய சித்ரா நீதிமன்றத்தின் கதவை தட்டினார். இதனையடுத்து கேரளா உயர்நீதிமன்றம் சித்ராவிற்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. அதன்படி ஆசிய தடகள போட்டியில் சித்ரா பங்கேற்று தங்கமும் வென்றார். அப்போது சித்ரா நடத்திய போராட்டத்திற்கு பல தரப்பில் இருந்தும் அவருக்கு ஆதரவாக பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தி இந்தியாவை பதக்க பட்டியலில் தலை நிமிரவைத்துள்ளார் சித்ரா.