சாய்னா குறித்து நடிகர் சித்தார்த் அவதூறு: தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

சாய்னா குறித்து நடிகர் சித்தார்த் அவதூறு: தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
சாய்னா குறித்து நடிகர் சித்தார்த் அவதூறு: தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
Published on

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டது தொடர்பாக நடிகர் சித்தார்த்திடம், தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது. 

திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும், தங்களது கருத்துகளை, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ஆக்டிவ்வாக இயங்கி வருவர். இவர்களில் முக்கியமானவர் சித்தார்த். தான் நடிக்கும் படங்களை விளம்பரப்படுத்துவது மட்டுமன்றி, அரசியல் ரீதியான கருத்துகளையும் துணிச்சலாக வெளியிட்டு வருபவர். எனினும் நடிகர் சித்தார்த் தனது ட்வீட் பதிவுகளின் மூலம் அவ்வப்பபோது சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு. அந்தவகையில் தற்போது புதிய சர்ச்சையில் நடிகர் சித்தார்த் சிக்கியுள்ளார்.

கடந்த 5-ம் தேதி பிரதமர் மோடி, பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, அங்கு சென்றபோது வழியில் விவசாயிகளின் போராட்டத்தால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக, மீண்டும் டெல்லி திரும்பினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். "எந்தவொரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பஞ்சாப்பில் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்" என்று தனது ட்வீட்டில் சாய்னா நேவால் தெரிவித்திருந்தார்.

சாய்னாவின் இந்தப் பதிவை டேக் செய்த நடிகர் சித்தார்த், சர்ச்சைக்குரிய வகையில் பொருள்கொள்ளும்படி குறிப்பிட்டிருந்தார் என்று அவருக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் வர ஆரம்பித்தன. இது பெண்களை மிகவும் இழிவுப்படுத்துவதாக சர்ச்சை உருவானது. இதையடுத்து பாடகி சின்மயி, நடிகை குஷ்பு, கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா உள்ளிட்ட பலரும் சித்தார்த்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் விமர்சனத்திற்கு பதிலளித்த சித்தார்த், "நான் தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை. யாரையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை. அவ்வளவுதான்" என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுக் கூறி தேசிய மகளிர் ஆணையம் தமிர்நாடு மற்றும் மகாராஷ்டிரா காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும், சித்தார்த்துக்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், "உங்களின் கருத்து பெண்களை மற்றும் பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கில் உள்ளது. ஒரு பெண்ணுக்கு எதிரான இத்தகைய மோசமான மற்றும் பொருத்தமற்ற கருத்தை மகளிர் ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. தானாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com