இந்தியா இங்கிலாந்து இடையே நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் ரோகித் சர்மாவின் ஆட்டம் கிளாசிக்காக இருந்ததாக அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
இது குறித்து விராட் கோலி கூறும் போது, “ நேற்று நானும் ரோகித்தும் எங்களின் நோக்கத்திற்காக பாஸிடிவ்வாக இருந்தோம். எங்களுக்கு ஒருவரையொருவர் நம்பலாம் எனத் தெரியும். ஒருவர் விக்கெட்டை பறிகொடுத்தாலும் மற்றொருவர் நின்று விளையாட முடியும். நேற்று ரோகித் சர்மாவின் ஆட்டம் கிளாசிக்காக இருந்தது. அதன் பின்னர் களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் ஆட்டத்தை மேல்நோக்கி கொண்டு செல்ல, ஹர்திக் பாண்ட்யா அதனை முடித்து வைத்தார். நான் ஐபிஎல் தொடரிலும் ஓப்பனிங் இறங்க உள்ளேன். நான் வெவ்வேறு இடங்களில் களமிறங்கி பேட் செய்திருக்கிறேன். ஆனால் இந்த ஆட்டத்தில் நானும் ரோகித்தும் மிடில் ஆர்டரில் சரியான ஆட்டத்தைக் கொடுத்திருப்பதாக உணர்கிறேன்’ என்றார்.
மேலும் பேசிய கோலி, டி 20 கிரிக்கெட்டில் இரண்டு தரமான விளையாட்டு வீரர்கள் அதிக ஓவர்கள் விளையாடிய போட்டியாக இந்த டி20 போட்டி அமைந்துள்ளது. ஆட்டத்தின் டாப் ஆர்டரில் நிச்சயமாக நான் ரோகித்துடன் இணைய விரும்புகிறேன். எங்களது பார்டனர் ஷிப் இணைந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது ஒருவர் தனது விக்கெட்டை இழந்தாலும், மற்றொருவர் நிற்பதால் அடுத்து களம் இறங்கும் வீரர்கள் அதிக நம்பிக்கையுடன் விளையாடுவர். அது அணிக்கும் நல்லது. இதே முறையிலான ஆட்டமுறையை வரும் போட்டிகளிலும், உலகக்கோப்பை போட்டியிலும் தொடர்வோம்” என்றார்.
முன்னதாக, இந்தியா இங்கிலாந்து மோதிய கடைசி டி20 போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். லோகேஷ் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், விராட் கோலியும் களம் இறங்கினர்.
அணியின் ரன் உயர்வுக்கு பலமான அஸ்திவாரம் அமைத்த இந்தக் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 94 ரன்களை சேர்த்தது. பென் ஸ்டோக்ஸ் ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டான ரோகித் சர்மா 64 ரன்கள் சேர்த்தார். கோலி அதிரடியாக விளையாடி 80 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த கூட்டணியின் அதிரடி ஆட்டம் ரசிகர்களுக்கு வான வேடிக்கையாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் 32 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 39 ரன்கள் எடுக்க இறுதியில் இந்திய அணி 224 ரன்கள் குவித்தது. அதனைத்த்தொடர்ந்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன் கள் எடுத்து தோல்வியை தழுவியது.