காயப்படுத்திய வார்த்தைகள் - மனமுடைந்து கண்ணீர் சிந்திய டென்னிஸ் வீராங்கனை
இந்தியன் வெல்ஸில் நடைபெற்ற போட்டியில் 4 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஜப்பானின் நவாமி ஒசாகா, பார்வையாளர் ஒருவரின் வசை சொற்களால் மனமுடைந்து மைதானத்திலேயே கண்ணீர் சிந்தியுள்ளார்
WTA தொடரில் இந்தியன் வெல்ஸில் நடைபெற்ற போட்டியில் ஜப்பானின் நவாமி ஒசாகா, வெரோனிகா குடெர்மெடோவா இருவரும் மோதினர். இந்த போட்டியில் 6-0, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ஒசாகாவை வீழ்த்தினார் வெரோனிகா. ஆட்டம் துவங்கியவுடன் பார்வையாளர் ஒருவர் நவோமி ஒசாகா பெயரைச் சொல்லி அழைத்து அவரை வசைபாடினார். இதைக் கேட்டவுடன் ஒசாகா அதிர்ச்சியடைந்தார்.
நடுவரிடம் இது தொடர்பாக உடனடியாக முறையிட்டார் ஒசாகா. நடவடிக்கை எடுக்குமாறு அவர் கெஞ்சும் தொனியில் நடுவரிடம் கூறினார். ஆனால் நடுவர் ஆட்டத்தை தொடரச் சொல்ல, கண்ணீரை துடைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் விளையாடத் துவங்கினார். ஆனால் வசைச் சொல்லால் அவரது சமநிலை இழந்துபோனதால். பெரிய போராட்டமின்றி தொடர்ந்து 2 செட்களை இழந்து தோல்வியை தழுவினார் ஒசாகா.
போட்டிக்குப் பிறகு பேசிய ஒசாகா “அந்தக் கருத்து தன்னை மிகவும் புண்படுத்தியதாகக் கருதவில்லை. ஆனால் வீனஸ் மற்றும் செரீனா வில்லியம்ஸ்க்கு இந்தியன் வெல்ஸில் நிகழ்ந்த சம்பவத்தை அது நினைவூட்டியது” என்றார். 2001 ஆம் ஆண்டு இதே இந்தியன் வெல்ஸ் மைதானத்தில் வீனஸ் மற்றும் செரினா வில்லியம்ஸ் சகோதரிகள் பார்வையாளர்களால் நிறவெறிச் சொற்களால் கடுமையாக வசைபாடப்பட்டனர். இதையடுத்து வில்லியம்ஸ் சகோதரிகள் 14 ஆண்டுகள் இம்மைதானத்தில் விளையாடுவதை புறக்கணித்தனர்.