சமீபகாலமாகவே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் ஆட்டம் கவலைக் கொள்ளும் விதத்தில் உள்ளது. தொடர்ச்சியாக அதிரடியாகவும், நிதானமாகவும் விளையாடி ரன்களை குவித்து வந்தவர் விராட் கோலி. ஆனால், கடந்த சில போட்டிகளில் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்தார். அந்த வரிசையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 3 ரன்களிலும் இரண்டாவது இன்னிங்ஸில் 14 ரன்களும் எடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஒட்டுமொத்தமாக 2 டெஸ்ட்களில் 4 இன்னிங்ஸூம் சேர்த்து கோலி வெறும் 38 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். கேப்டன் விராட் கோலி நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சவுத்தியின் பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். விராட் கோலியின் விக்கெட்டை அதிக முறை கைப்பற்றியவர் என்ற பெருமை சவுத்தியின் வசமே உள்ளது. இதுவரை அதிகபட்சமாக 10 முறை விராட் கோலியின் விக்கெட்டை அவர் வீழ்த்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்ஸில் சற்றே ஒரு மாற்றத்துக்காக கிராண்ட்ஹோம் பந்துவீச்சில் கோலி ஆட்டமிழந்தார்.
விராட் கோலியின் மோசமான பார்ம் தொடர்வது இந்திய அணிக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது. அவர் கடைசியாக விளையாடிய 6 சர்வதே போட்டிகளில் 14, 3, 19, 2, 9, 15 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சியை கொடுத்து வருகிறார். விராட் கோலி மோசமான ஆட்டமும் ஒருநாள் தொடரை இந்திய அணி இழப்பதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது. இதுமட்டுமல்ல தொடர்ச்சியாக அவர் டிஆர்எஸ் முறையை தவறாக பயன்படுத்தி வருகிறார். எல்.பி.டபில்யூ முறை அவுட் கொடுக்கப்பட்டதில் இதுவரை அவர் 14 முறை டிஆர்எஸ் முறையை பயன்படுத்தியுள்ளார். இதில் இரண்டு முறை மட்டுமே அவர் தப்பியுள்ளார்.
அதேபோல துணைக் கேப்டன் ரஹானேவும் இந்த டெஸ்ட் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும், இரண்டாவது இன்னிங்ஸில் ரஹானே விளையாடிய விதம் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் ரஹானேவுக்கு பவுன்சர் பந்துகளாய் வீசினார் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரஹானே. இதை ரஹானேவால் சமாளிக்கவே முடியாமல் ஒரு கட்டத்தில் அவர் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார். இத்தொடரில் 4 இன்னிங்ஸில் 91 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் ரஹானே.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை எடுத்து ஏமாற்றமளித்துள்ளது. கிறைஸ்ட்சா்ச் நகரில் இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக விஹாரி 55, புஜாரா 54, பிருத்வி ஷா 54 ரன்கள் சேர்த்தனர். நியூஸி. தரப்பில் ஜேமிஸன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லாதம் 52, ஜேமிஸன் 49 ரன்கள் எடுத்தனர் முகமது ஷமி 4 விக்கெட்டுகள், பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 7 ரன்கள் முன்னிலைப் பெற்று இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸ் போல இல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிருத்விஷா மற்றும் மயாங்க் அகர்வால் விரைவாக ஆட்டமிழந்தனர். இந்த இன்னிங்ஸிலாவது சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி 14 ரன்களில் கிராண்ட் ஹோம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணியை தோல்வியில் இருந்து ரஹானேவும் புஜாராவும் மீட்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இருவரும் முறையே 9 மற்றும் 24 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அடுத்து "நைச் வாட்ச்மேனாக" களமிறங்கிய உமேஷ் யாதவ் 1 ரன்னில் நடையை கட்டினார். இப்போது விஹாரியும், ரிஷப் பன்ட்டும் களத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 90 ரன்களை எடுத்தது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்ற போது இந்திய அணியின் புகழ் உச்சத்தில் இருந்தது. ஏனெனில் அதற்கு முன்பு ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றிருந்தது. ஆனால், ஒருநாள் தொடரில் ஒயிட் வாஷ் ஆன இந்திய அணி, தற்போது டெஸ்ட் தொடரையும் முழுமையாக இழந்துவிடுமோ என நிலையில்தான் இருக்கிறது. இந்த ஒரே தொடரில் இந்திய அணி மோசமான பெயரை வாங்கிக் கட்டிக் கொண்டது.