உருகுவே - போர்சுகல் அணிகளுக்கு இடையேயான நேற்றைய கால்பந்து ஆட்டத்தின்போது, போராட்டக்காரர்களில் ஒருவர் திடீரென வானவில் நிறத்திலான கொடியை (அனைத்து பாலினத்தையும் குறிக்கும்) கையில் ஏந்தி, `உக்ரைனை காப்பாற்றுங்கள்’ `இரானிய பெண்களுக்கு மரியாதைகள்’ என்ற வாசகமிட்ட டீஷர்ட்டை அணிந்தபடி ஓடினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் H பிரிவில் இடம்பெற்றுள்ள போர்ச்சுகல் - உருகுவே அணிகள் களம் கண்டன. இந்த போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இரண்டாவது பாதி ஆட்டத்தின் 54 மற்றும் 90+8-வது நிமிடங்களில் போர்ச்சுகல் வீரர் பெர்மாண்டஸ் இரண்டு கோல்களை அடித்தார். இதன் மூலம் போர்ச்சுகல் அணி 2:0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வென்று அடுத்த சுற்று போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த இரண்டாவது பாதியின்போது, மைதானத்திலிருந்த போராட்டக்காரர்களில் ஒருவர் திடீரென வானவில் நிறத்திலான கொடியை கையில் ஏந்தி, `உக்ரைனை காப்பாற்றுங்கள்’ `ஈரானிய பெண்களுக்கு மரியாதைகள்’ என்ற வாசகமிட்ட டீஷர்ட்டை அணிந்தபடி ஓடினார்.
உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு அலுவலர்கள், அவரை சுரங்கப்பாதை வழியாக அழைத்துச் சென்றனர். அவர்கள் இழுத்துச் சென்றதால், அந்நபர் கையில் வைத்திருந்த வானவில் நிற கொடி, மைதானத்திலேயே விழுந்தது. இந்நிலையில் போட்டியின் நடுவரான அலிசெரா (ஈரானியர்) அந்தக் கொடியை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். அந்நபரை காவல்துறையினர் கைது செய்தனரா, அல்லது அவருக்கு வேறு எதும் நிகழ்ந்ததா என இப்போதுவரை அதிகாரப்பூர்வமாக தெரியவரவில்லை. இச்சம்பவம் குறித்து ஃபிஃபா தரப்பிலும் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த உலகக்கோப்பையில் கலந்துக்கொள்ளும் யாரும் (பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் அனைவரும்) வானவில் நிறத்தில் கொடியோ, ஆடையோ அணிந்தோ கையில் கொண்டு வரவோ கூடாது என ஃபிஃபா தரப்பில் கூறப்பட்டிருந்ததாக உலகக்கோப்பை தொடக்கத்தில் தகவல்கள் பரவின. ஆனா ஃபிஃபா அதை மறுத்து, `யார் வேண்டுமானாலும் வானவில் நிறத்தில் கொடிகள் கொண்டு வரலாம். தடையேதுமில்லை’ என்று கூறியிருந்தது.
ஆனால் வேல்ஸின் முன்னாள் கேப்டன் லாரா மெக்அலிஸ்டர், கடந்த வாரம் அமெரிக்காவுடன் வேல்ஸ் ஆடிய போட்டியை பார்க்க மைதானத்திற்கு சென்றபோது தனது வானவில் நிற தொப்பியை அங்கிருந்தவர்கள் கழற்றச் சொல்லி மிரட்டியதாகக் கூறியிருந்தார். இது சர்ச்சையாகியிருந்த நிலையில், தற்போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நாட்டின் சட்டங்களின்படி LGBQT+ மற்றும் ஓரினச்சேர்க்கை ஆகியவை சட்டவிரோதமானவ என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிகள் முடிந்த பின், போர்ச்சுகல் வீரர் இதுகுறித்து பேசுகையில், “இப்படி நடப்பது இயல்புதான். அந்த நபருக்கு எதுவும் நடந்திருக்காது என நம்புகிறேன். அவருடைய கருத்தை நாங்கள் புரிந்துக்கொள்கிறோம். அவருடன் நாங்கள் உள்ளோம்” என்று ஆதரவு தெரிவித்துள்ளார்