அசராமல் போராடிய விராட் கோலியும் அவுட் - கடைசி நேர திக்..திக்..திக்

அசராமல் போராடிய விராட் கோலியும் அவுட் - கடைசி நேர திக்..திக்..திக்
அசராமல் போராடிய விராட் கோலியும் அவுட் - கடைசி நேர திக்..திக்..திக்
Published on

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, பர்மிங்ஹாமில் நடந்து வருகிறது. இது இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆயிரமாவது டெஸ்ட் போட்டி. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 287 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 80 ரன்னும் பேர்ஸ்டோவ் 70 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும், விராத் கோலி, அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 225 பந்துகளில் 149 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். பின்னர் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் கரன் அதிரடியாக விளையாடி அதிகபட்சமாக 63 ரன்கள் குவித்தார். இதில் 9 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும். இந்திய அணி தரப்பில் இஷாந்த் ‌ஷர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதனையடுத்து விளையாடிய இந்திய அணியில், மீண்டும் தொடக்க வீரர்கள் சொதப்பினர். முரளி விஜய் (6), ஷிகர் தவான் (13), கே.எல்.ராகுல் (13), ரகானே (2) என வந்த வேகத்தில் அனைவரும் நடையை கட்டினர். விராட் கோலி மட்டும் வழக்கம் போல் தனி ஆளாக களத்தில் நின்று ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தார். மற்றவர்கள் வந்ததும் போவதுமாக இருந்தார்கள். நேற்று கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் சற்று நேரம் விராட் கோலிக்கு ஒத்துழைப்பு அளித்தார். 3ம் நாள் முடிவில், விராட் கோலி 43, தினேஷ் கார்த்திக் 18 ரன்னுடன் களத்தில் இருந்தனர். 

இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலே மேற்கொண்டு 2 ரன்கள் மட்டும் சேர்த்து தினேஷ் கார்த்திக் அவுட் ஆனார். இது இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடியிருந்தால் வெற்றி வாய்ப்புக்கு நெருக்கடி இருந்திருக்காது. பின்னர் விராட் கோலியுடன், ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். முதலில் நிதானமாக விளையாடினாலும், அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி பாண்ட்யா சற்றே ரன்களை உயர்த்தினார். இதனால், விராட் - பாண்ட்யா ஜோடி இந்திய அணியை வெற்றிக் கொண்டு செல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், இடிபோல் விராட் கோலியின் விக்கெட் விழுந்தது. அப்பொழுது தான் விராட் அரைசதம் கடந்து இருந்தார். 51 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார் விராட். அதே ஓவரில் முகமது சமியும் டக் அவுட் ஆனார். வந்த வேகத்தில் இரண்டு பவுண்டரிகளை அடித்து நம்பிக்கையூட்டிய இஷாந்த் சர்மாவும் 11 ரன்னில் ஆட்டமிந்தார். 51 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com