ஐபிஎல்-இல் பங்கேற்க மீண்டும் தங்க தமிழ்தேசத்திற்கு வந்துவிட்டேன் என ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி, ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. 12 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 23 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
முதல் போட்டியே முக்கிய இரு அணிகளுக்கு இடையேயான போட்டி என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கிய நிலையில் நேற்று இரவு முதலே ரசிகர்கள் வரிசையில் காத்திருந்தனர். இதற்கிடையே சென்னை அணி வீரர்கள் சென்னைக்கு வருகைதரவும் தொடங்கியுள்ளனர். ரெய்னா, தோனி ஆகியோர் ஏற்கெனவே சென்னைக்கு வந்துவிட்டனர். இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இன்று சென்னை வந்தடைந்தார்.
தனது வருகை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹர்பஜன், ''பேரன்பிற்கும், பெருமதிப்பிற்குரிய என்னருமை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களே ஐபிஎல்லில் பங்கேற்க மீண்டும் தங்க தமிழ்தேசத்திற்கு வந்துவிட்டேன். ஒரு ராணுவ வீரன் வருடத்திற்கு ஒரு முறை தன் சொந்தங்களை பார்க்க ஆனந்த கண்ணீருடன் வருவான் அதே உணர்வு தான் என்னுள் இப்போது'' என்று தெரிவித்துள்ளார்.