இதே நாளில் 11 ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் நிகழ்த்திய அற்புத சாதனை!

இதே நாளில் 11 ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் நிகழ்த்திய அற்புத சாதனை!
இதே நாளில் 11 ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் நிகழ்த்திய அற்புத சாதனை!
Published on

இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். இப்போது பலரும் செய்யும் சாதனைகளுக்கு ஆரம்பத்தில் பிள்ளையார் சுழி போட்டது சச்சின்தான் என்றால் அது மிகையல்ல. இப்போது ஒருநாள் போட்டிகளில் சில வீரர்கள் இரட்டைச் சதம் அடித்திருக்கிறார்கள். அதிலும் ரோகித் சர்மா இரட்டைச் சதத்தை மூன்று முறை விளாசியுள்ளார். ஆனால் இதற்கு முதலில் விதைப் போட்டது சச்சின் டெண்டுல்கர்கான்.

2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி குவாலியர் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் என்ற சாதனையை கிரிக்கெட் உலகில் நிகழ்த்திக்காட்டினார் சச்சின் டெண்டுல்கர். சச்சின் இந்தச் சாதனையை நிகழ்த்துவதற்கு முன்பாக ஒருநாள் போட்டிகளில் தனிநபராக அதிகபட்ச ரன்களாக 194  ரன்கள் எடுத்த வீரர்களின் வரிசையில் நீண்டகாலமாக முதலிடத்தில் இருந்தவர் பாகிஸ்தானின் சயீத் அன்வர். அவரது சாதனையை யார் முறியடிப்பார் என கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நேரம் அது.

ஒரு 'ப்ளாஷ்பேக்'

குவாலியர் மைதானத்தில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் ஒருநாள் ஆட்டத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அப்போதைய இந்தியக் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வீரேந்திர ஷேவாக்  மற்றும் சச்சின் டெண்டுல்கர் களமிறங்கினர். அதிரடியாக விளையாடக்கூடிய வீரேந்திர ஷேவாக் 4-வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து, இந்திய அணி விரைவாக ரன் குவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். அவருக்கு தினேஷ் கார்த்திக்கும் நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்தார். தினேஷ் கார்த்திக் 79 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த யூசப் பதான் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து சச்சினுக்கு உறுதுணையாக வந்து நின்றார் தோனி. அவருடன் சேர்ந்து தோனியும் அதிரடி காட்டினார். இதனால் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் திக்குமுக்காடி போனார்கள். ஒரு பக்கம் சச்சின் 190 ரன்களை தாண்டி சென்றுக் கொண்டு இருக்கிறார்.

ஆனால் தோனியோ அதிரடியாக விளையாடிக்கொண்டு இருக்கிறார். சச்சினுக்கு ஸ்டிரைக் கொடுப்பது குறைந்து வருகிறது. மைதானத்தில் மட்டுமல்லாமல் உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் ஒருநாள் போட்டியின் முதல் இரட்டைச் சதத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஒரு வழியாக சச்சினுக்கு ஸ்டிரைக் கிடைக்க பாயின்ட் திசையில் பந்தை அடித்து இரட்டை சதமடிக்கிறார். மைதானமே உற்சாக்ததில் மிதக்கிறது. இந்த இன்னிங்ஸின் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 50 ஓவர்களும் பேட்டிங் செய்த சச்சின் டெண்டுல்கர் 147 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார்.

இந்த இன்னிங்ஸில் சச்சின் 25 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். 37 பந்துகளில் 68 ரன்களை விளாசினார். இந்தப் போட்டியிலும் இந்தியா அபாரமான வெற்றியை பெற்றது. சச்சின் டெண்டுல்கர் முதல் முறையாக 200 அடித்தபோது வர்ணனையாளராக இருந்த ரவி சாஸ்திரி சொன்ன வார்த்தைகள் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது அது " இந்த பூமிக்கோளின் முதல் மனிதர், சர்வதேச ஒருநாள் போட்டியில் முதன்முதலாக கிரிக்கெட் கடவுள் இரட்டை சதம் அடித்துவிட்டார்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com