கால்பந்தாட்ட ரசிகர்களே ! இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க

கால்பந்தாட்ட ரசிகர்களே ! இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க
கால்பந்தாட்ட ரசிகர்களே ! இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க
Published on

ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டி ஜூலை 15 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கால்பந்தாட்டப் போட்டியில் இறுதிப் போட்டி என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக பார்க்கப்படும். ஆனால் அதைவிட இன்றைய நாளைதான் கால்பந்தாட்ட ரசிகர்களில் வரலாற்றில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆம், இதே நாளில் தான் 1930 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி தொடங்கிய நாள். ஏறக்குறைய 88 ஆண்டுகளாக ஒரு விளையாட்டின் உலகக் கோப்பையை ரசிகர்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

கால்பந்து அணிகளுக்கான உலக சாம்பியன் முதல் தொடரை நடத்தும் நாடாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) உருகுவேயை தேர்வு செய்தது. உருகுவே நாடு தனது முதல் அரசியல் சட்டத்தின் நூற்றாண்டு விழாவை அப்போது கொண்டாடியது. மேலும் 1928 ஒலிம்பிக் போட்டியில் கால்பந்தில் தங்கப்பதக்கத்தை வென்றது. இதன் காரணமாக வைத்தே முதல் தொடரை நடத்த உருகுவேவுக்கு வழங்கப்பட்டது. இந்தத் தொடரில் அனைத்து ஆட்டங்களும் தலைநகரான மான்டெவிடியோவில் புதிதாக இதற்காக கட்டப்பட்ட நூற்றாண்டு மைதானத்தில் நடைபெற்றன. 

தென்  அமெரிக்காவில் இருந்து 7, ஐரோப்பாவில் இருந்து 4, வட அமெரிக்காவில் இருந்து 2 என மொத்தம் 13 நாட்டு அணிகள் முதல் உலகக் கோப்பையில் பங்கேற்றன. ஜூலை 13-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ஆட்டங்கள் நடைபெற்றன. உருகுவேக்கு கடல்வழி பயணம் மேற்கொள்வது மிகுந்த சிரமமான விஷயம் என்பதால் சில ஐரோப்பிய நாடுகளே போட்டியில் பங்கேற்றன.

அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதில் முதலிடம் பெற்ற அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் இரண்டு போட்டிகள் ஓரே நேரத்தில் நடத்தப்பட்டு அதில் பிரான்ஸ் 4-1 என மெக்ஸிகோவையும், அமெரிக்கா 3-0 என பெல்ஜியத்தையும் வென்றன. பிரான்ஸ் வீரர் லுசியன் லாரண்ட் உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதல்  கோலை அடித்தார். 

ஆர்ஜென்டீனா, உருகுவே, அமெரிக்கா, யுகோஸ்லேவியா உள்ளிட்டவை அரையிறுதிக்கு தகுதி பெற்றன. ஆர்ஜென்டீனா 6-1 என அமெரிக்காவையும், உருகுவே 6-1 என யுகோஸ்லேவியாவையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறின. உருகுவே அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி முதல் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.

அப்போதே இந்தப் போட்டியலை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்தில் கண்டுக்களித்தனர். இந்தத் தொடரில் 37 வீரர்களால் மொத்தம் 70 கோல்கள் அடிக்கப்பட்டன. கில்லர்மோ ஸ்டேபிள் அதிகபட்சமாக 8 கோல்களை அடித்தார்.  ஆர்ஜென்டீனாவின் ஜோஸ் நஸாஸி சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். இப்போது ரஷ்யாவில் நடந்து வரும் உலகக் கோப்பை 21-ஆவது போட்டியாகும்.

இதில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்றது. இந்த அணிகள் 16 ஆக குறைந்து நாக் அவுட் சுற்றுக்  முன்னேறியது. பின்பு 8 அணிகள் காலிறுதியில் மோதி, அரையிறுதிக்கு பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் பங்கேற்று, அதில் இருந்து இரண்டுகள் அணிகள் கோப்பையை வெல்ல தகுதிப் பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com