2016-ஆம் ஆண்டு இதே நாளில் நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது இந்திய அணி.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை அவர் படைத்தார். சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும், உலகின் சிறந்த விக்கெட் கீப்பராகவும் அவர் ஜொலித்தாலும், கேப்டனாக அவர் அணியை வழிநடத்தியதுதான் ஆகச்சிறந்த பெருமையாக கருதப்படுகிறது.
28 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்காக உலகக் கோப்பையை பெற்றுத் தந்தார். அதேபோல், டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியையும் அவர் தலைமையிலான அணி வென்றுள்ளது. மூன்று ஐசிசி டிராபிகளையும் பெற்ற இந்திய கேப்டன் என்ற பெருமை அவர் வசமே உள்ளது. அந்த வகையில்தான் 2016 -ஆம் ஆண்டு தோனி தலைமையிலான அணி, ஆசியக் கோப்பை டி20 தொடரை இதே நாளில் வீழ்த்தியது.
2016-ம் ஆண்டு ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி மார்ச் 6-தேதி இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. லீக் போட்டிகளில் பங்களாதேஷை 45 ரன்கள் வித்தியாசத்திலும், பாகிஸ்தான், இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்திலும், ஐக்கிய அமிரகத்தை 9 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. அதேபோல், இந்தியாவிடம் முதல் போட்டியில் தோற்றாலும் ஐக்கிய அரபு அமிரகம், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி பங்களாதேஷ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இறுதிப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் பங்களாதேஷ் அணி 120 ரன்கள் எடுத்தது. 121 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 13.5 ஓவர்களில் 122 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்திய அணியில் ஷிகர் தவான் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, விராட் கோலி 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கடைசி நேரத்தில் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 6 பந்துகளில் 20 ரன்கள் விளாசினார் தோனி. தன்னுடைய பாணி சிக்ஸர் விளாசி வெற்றியை பதிவு செய்தார். கடைசி இரண்டு ஓவர்களில் 12 பந்துகளுக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸர்கள் விளாசி பங்களாதேஷ் ரசிகர்கலை கலங்க வைத்தார் தோனி.
ஆசியக் கோப்பையை வென்றதை இந்திய மற்றும் தோனியின் ரசிகர்கள் பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.