Fake Fielding விவகாரம்... யார் பக்கம் தவறு? வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே சொல்லும் விளக்கம்!

Fake Fielding விவகாரம்... யார் பக்கம் தவறு? வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே சொல்லும் விளக்கம்!
Fake Fielding விவகாரம்... யார் பக்கம் தவறு? வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே சொல்லும் விளக்கம்!
Published on

'ஃபேக் ஃபீல்டிங்' விவகாரத்தில் யார் பக்கம் தவறு என்பது குறித்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே வெளிப்படையாக பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தின்போது இந்திய வீரர் விராட் கோலி Fake Fielding (ஃபேக் ஃபீல்டிங்) எனப்படும் பேட்ஸ்மேன்களை திசை திருப்பும் செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

அர்ஷ்தீப் சிங் வீசிய 7வது ஓவரில் லிட்டன் தாஸ் அடித்த பந்து அக்சர் படேலை நோக்கிச் சென்றது. ஃபீல்டிங்கில் நின்று கொண்டிருந்த விராட் கோலியை தாண்டி பந்து சென்றபோது, பந்தைப் பிடிக்காமலேயே பந்தைப் பிடித்தது போலவும், விக்கெட் கீப்பரிடம் 'த்ரோ' செய்வது போலவும் பாவனை செய்தார். அந்த நேரத்தில் கள நடுவர்கள் இதைக் கவனிக்கவில்லை. இதுதான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. விராட் கோலி இப்படி செய்தது ஐசிசியின் 41.5-வது விதிமுறைக்கு முரணானது என வங்கதேச ரசிகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கோலி ஃபேக் ஃபீல்டிங் செய்ததாக சொல்லப்படும் இந்த விவகாரத்தை, போட்டி முடிந்த பிறகு வங்கதேச விக்கெட் கீப்பர் நூருல் ஹசன் எழுப்பினார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “இதற்கு தண்டனையாக, எங்கள் அணிக்கு 5 ரன்கள் கொடுத்திருக்கலாம். அது எங்களுக்கு சாதகமாக முடிந்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை" என்றார்.

இந்நிலையில் 'ஃபேக் ஃபீல்டிங்' விவகாரத்தில் யார் பக்கம் தவறு என்பது குறித்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே வெளிப்படையாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ''ஃபேக் ஃபீல்டிங் நிகழ்வை நடுவர்கள், பேட்ஸ்மேன்கள், ஏன் நாமும்கூட பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதே நிதர்சனம். ஐசிசி விதி 41.5 ஃபேக் ஃபீல்டிங் செய்வோரை தண்டிக்க வழிவகை செய்கிறது. எனவே நடுவர்கள் இதுகுறித்து உரிய விளக்கத்தை தரவேண்டும். ஆனால் யாரும் அதை கண்டுகொள்வதாக தெரியவில்லை.

மைதானம் ஈரப்பதமாக இருப்பதைப் பற்றி யாரும் குறை சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். மைதானம் பேட்டிங் செய்யக்கூடிய அணிக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று ஷகிப் கூறியது சரிதான். மழையால் ஆட்டம் தடைபட்டபோது நடுவர்கள் மிகச் சிறப்பாகக் கையாண்டார்கள். அதனால் சிறிது நேரத்தை இழக்க நேரிட்டது.



எனவே, பங்களாதேஷ் நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், உங்கள் அணி இலக்கை எட்டாததற்கு ஃபேக் ஃபீல்டிங்கை அல்லது மழை சூழ்நிலையை ஒரு காரணமாக பார்க்க வேண்டாம். கடைசி வரை அதிரடியை தொடர்ந்திருந்தால் வங்கதேசம் வெற்றி பெற்றிருக்கலாம். நாம் அனைவரும் குற்றவாளிகள் தான். சாக்குப்போக்குகளை தேடினால் நாம் இன்னும் வளரவில்லை என்று அர்த்தம்'' என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com