இலங்கை கேப்டனை மன்கட் முறையில் அவுட் செய்ததற்காக விமர்சனத்துக்குள்ளான முகம்மது ஷமிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார் அஸ்வின்.
இலங்கை அணிக்கு எதிராக கவுகாத்தியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை கேப்டன் ஷனகா 98 ரன்களில் இருந்தபோது, கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி அவர் கிரீசை விட்டுத் தாண்டி சென்றதற்காக மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். ஆனால் அந்த அவுட்டிற்கான அப்பீலை கேப்டன் ரோகித் சர்மா வாபஸ் பெற்றார். இதனால் ஷனகா மீண்டும் ஆடி சதம் எடுத்தார்.
இந்தப் போட்டியில் இந்தியாவின் வெற்றி உறுதியாகி விட்ட சூழலில், சிறப்பாக விளையாடி கடைசி ஓவரில் 98 ரன்களில் இருந்த இலங்கை கேப்டனை சதமடிக்க விடாமல் தடுக்க நேரடியாக அவுட் செய்ய முடியாமல் மன்கட் முறையில் அவுட் செய்ய முயன்ற முகமது ஷமியின் செயலுக்கு பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.
இதுதொடர்பாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறிய போது, “ஷமி இப்படிச் செய்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஷனகா அருமையாக ஆடினார். அவர் ஆடிய விதத்திற்காகவே அவர் சதமெடுக்க உரியவர். அவரை இந்த முறையில் அவுட் செய்யக்கூடாது. அவர் 98 ரன்களில் இருந்தார். அவரை எப்படி வீழ்த்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோமோ அப்படித்தான் அவுட் செய்ய முடியுமே தவிர, 'மன்கட்' செய்து அவுட் ஆக்குவது கூடாது. இப்படி அவுட் ஆக்குவது பற்றி நாங்கள் சிந்திக்கவும் இல்லை'' என்று பேசியிருந்தார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைப்படி மன்கட் முறையில் ரன்-அவுட் செய்வது அதிகாரப்பூர்வ அவுட்டாகவே கருதப்படும் என்றாலும், நீண்டகாலமாகவே இந்த மன்கட் அவுட் முறை விவாதத்துக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. அது ஒரு குறுக்குவழியில் விக்கெட்டை வீழ்த்துவது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துவதால் பந்துவீச்சாளர்கள் பலரும் இந்த முறையில் அவுட் செய்வதை விரும்புவது கிடையாது.
இந்த நிலையில் மன்கட் முறையில் அவுட் செய்வதில் 'ஸ்பெஷலிஸ்ட்' ஆன ரவிச்சந்திரன் அஸ்வின், இலங்கை கேப்டன் ஷனகாவை மன்கட் முறையில் ரன் அவுட் செய்ய முயன்ற முகம்மது ஷமிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், ''நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். 'மன்கட்' ஒரு அதிகாரப்பூர்வ அவுட் முறைதான். ஆட்டத்தின் போக்கு எப்போது வேண்டுமானாலும் மாற வாய்ப்புள்ளது. எனவே ஒரு பந்து வீச்சாளர் அவுட்டுக்கு அப்பீல் கேட்கும்போது அதை பரிசீலித்து அவுட் கொடுப்பது நடுவரின் கடமை ஆகும். எல்பிடபிள்யூ, கேட்ச் ஆகிய அவுட் முறைகளுக்கு அப்பீல் கேட்க கேப்டனை கேட்டுத்தான் செய்கிறோமா? 'மன்கட்' அவுட் முறையைச் சுற்றி பல தடைகள் இருப்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. விக்கெட்டை வீழ்த்துவதுதானே பந்து வீச்சாளரின் பணி. அவுட்டுக்கு அப்பீல் செய்யும் உரிமை அல்லது அந்த முடிவை எடுப்பது பவுலராகவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.