வினேஷ் போகத்
வினேஷ் போகத்X

‘தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டது’ to ‘IND-க்கு ஒலிம்பிக்’ அசாத்தியத்தை சாத்தியப்படுத்திய வினேஷ்!

உலக அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் இதுவரை தோல்வியே சந்திக்காமல் வலம்வந்த ஜப்பானின் யூ சுசாகிக்கு முதல் தோல்வியை பரிசளித்து அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத். அவர் கடந்துவந்த கடினமான பாதை குறித்து பார்க்கலாம்..
Published on

கடினமான காலங்களை எதிர்கொண்ட வினேஷ் போகத்..

2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் காயம் காரணமாக வெளியேறிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் காலிறுதியில் தோல்வியுற்று பதக்கம் வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்து வெளியேறினார்.

வினேஷ் போகத்
வினேஷ் போகத்

அதற்குபிறகு கடந்த 2023-ம் ஆண்டு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு கடின காலமாகவே இருந்தது. முன்னாள் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு தலைவராக இருந்த அப்போதைய பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை முன்மொழிந்தவர்களில் வினேஷ் போகத் முக்கியமான ஒருவர்.

முன்னதாக கடந்த வருடம் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது, ஒரு மைனர் உட்பட 7 மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதற்காக மல்யுத்த வீரர் வீராங்கனைகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர், அந்த போராட்டத்தில் நீண்டநாள் தெருக்களில் படுத்துறங்கி போராடிய வினேஷ் போகத், போலீசாரால் இழுத்துச்செல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

vinesh phogat
vinesh phogat

பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராடியவர்களில் ஒருவரான வினேஷ் போகத், பிரிஜ் பூஷன் மீது புகாரளித்த பிறகு “பிரிஜ் பூஷனால் நான் மன ரீதியாக துன்புறுத்தல் செய்யப்பட்டேன். எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர்” என்று பகிரங்கமாக தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து ஊக்கமருந்து தடுப்பு விதிகளைப் பின்பற்றத் தவறியதற்காகவும், பரிசோதனை நேரத்தில் கலந்துகொள்ள வரவில்லை என்பதற்காகவும் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்துக்கு எதிராக தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (NADA) நோட்டீஸ் அனுப்பியது.

கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருது
கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுமுகநூல்

இறுதியில் பிரிஜ் பூஷன் வழக்கில் நீதிகிடைக்கவில்லை என இந்திய அரசு வழங்கிய கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை பிரதமரிடம் திருப்பி அளிப்பதாக அறிவித்த வினேஷ் போகத், பிரதமர் அலுவகத்திற்கு செல்லும் வழியில் காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் சாலையின் நடுவில் விருதுகளை விட்டுச் சென்றார். அந்த விருதுகளை பின்னர் டெல்லி காவல்துறையினர் எடுத்துச் சென்றனர்.

வினேஷ் போகத்
'சின்னபசங்க கூடலாம் எதுக்கு போய் ஆடுறாரு?..' - TNPL ஆடுவது குறித்து உணர்வுபூர்வமாக பேசிய அஸ்வின்!

பங்கேற்பாரா மாட்டாரா என்று நீடித்த குழப்பம்? வரலாறு படைத்த வினேஷ்..

2023-ல் இப்படியான கடினமான நாட்களை கடந்த வினேஷ் போகத் 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்துகொள்வாரா மாட்டாரா என்ற குழப்பங்கள் நீடித்தது. இடைப்பட்ட கடின காலங்கள் எல்லாவற்றையும் மீறி அவர் அறுவை சிகிச்சையிலிருந்து தன்னை மீட்டு எடுத்துவர போராடிக் கொண்டிருந்தார். அனைத்தையும் தாண்டி ஒலிம்பிக் ஒதுக்கீட்டில் குவாலிஃபயர் ரவுண்ட்களில் பங்கேற்க வேண்டிய சூழலில் இருந்த வினேஷ், கடந்த 5 ஆண்டுகளாக 53 கிலோ இடைப்பிரிவில் போட்டியிட்ட தன்னுடைய அனைத்து தயாரிப்புகளையும் மாற்றிக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

வினேஷ் போகத்
வினேஷ் போகத்

இதையடுத்து அவர் 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க 50கிலோ எடைப்பிரிவில் குவாலிஃபயர் போட்டிகளில் பங்கேற்றார். தன் தகுதியை பாரீஸ் ஒலிம்பிக்கில் நிரூபிக்க குவாலிஃபயர் போட்டிகளில் 6 நிமிடங்களுக்குள் தன் அத்தனை போட்டியையும் வென்றெடுத்தார்.

வினேஷ் போகத்
IND Olympics: இந்தியாவுக்கா? பிரிட்டிஷ்க்கா? முதல் பதக்கத்தில் எழுந்த சர்ச்சை! யார் அந்த PRITCHARD?

யாராலும் தோற்கடிக்க முடியாத வீராங்கனையை தோற்கடித்த வினேஷ்..

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தம் 50கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இதுவரை உலக மேடைகளில் யாராலும் தோற்கடிக்கப்படாத நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானின் யூ சுசாகியை எதிர்கொண்டார்.

பரப்பாக நடைபெற்ற போட்டியின் இறுதி 30 வினாடிகள் வரை 0-2 என ஜப்பானின் யூ சுசாகியே முன்னிலை பெற்றிருந்தார். எப்படியும் வினேஷ் போகத் இந்த ஒலிம்பிக்கிலும் வெளியேறிவிடுவார் என்ற எண்ணம்தான் போட்டியை பார்த்த எல்லோருக்கும் தோன்றி இருக்கும். ஆனால் கடைசி 15 வினாடிகளில் நடந்தது எல்லாம் ஏதோ கனவுபோலத்தான் இந்திய ரசிகர்களுக்கு இருந்தது. ஆம், எப்படியும் காலிறுதிக்கு முன்னேறிவிட்டோம் என்ற எண்ணத்திலிருந்த யூ சுசாகிக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தினார் வினேஷ் போகத். கடைசி 15 வினாடிகளில் 3 புள்ளிகளை சேகரித்து 3-2 என யூ சுசாகியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானின் யூ சுசாகியை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார். யூ சுசாகி நடப்பு ஒலிமிக் சாம்பியன் மற்றும் 4 முறை உலக சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வினேஷ் போகத்
அறிமுக ஒலிம்பிக்கிலேயே வெண்கலம்.. இந்தியாவிற்கு 3வது பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசலே! அரிதான சாதனை!

3 தங்கப்பதக்கம் வென்றவரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி..

முன்னதாக காலிறுதிப்போட்டியில் காமன்வெல்த் போட்டிகளில் 3 முறை தங்கப்பதக்கம் வென்றவரான உக்ரைனின் ஒல்ஸானா லிவாச்சை எதிர்கொண்டு விளையாடினார் வினேஷ் போக்த்.

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் ஒக்ஸானா லிவாச்சை 7-5 என்ற கணக்கில் வீழ்த்திய வினேஷ் போகட் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார். இதுதான் வினேஷ் போகத்தின் முதல் அரையிறுதிப்போட்டியாகும். கடந்த 2020 ஒலிம்பிக்கில் காலிறுதியுடன் வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு முன் கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மானை எதிர்கொள்ளவிருக்கிறார். யூஸ்னிலிஸ் குஸ்மான் பான் அமெரிக்கன் கேம்ஸ் 2023-ல் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் மோதும் அரையிறுதிப்போட்டியானது இன்று இரவு 10.30 மணிக்கு நடக்கவிருக்கிறது.

வினேஷ் போகத்
களத்தில் சீறிப்பாய்ந்த ஈட்டி.. முதல் சுற்றிலேயே நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com