பாரீஸ் ஒலிம்பிக் சீசன் இது. இன்று காலையிலிருந்து சமூக ஊடகங்களில் Silver டிரெண்டிங்கில் இருக்கிறது. இதென்னடா தங்கத்துக்குப் பதில் வெள்ளிக்கு மவுசு என பார்த்தால், அதற்குக் காரணம் யூசஃப் டிகெக்.
துருக்கி நாட்டு துப்பாக்கி சுடுதல் வீரரான யூசஃப் டிகெக்-தான் சமூக வலைதளங்களின் சூப்பர் ஸ்டார்.
பொதுவாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஸ்பெஷல் கருவிகளுடன்தான் களம் இறங்குவார்கள். ஆனால், கையை பாக்கெட்டில் வைத்தபடி, எந்தவித ஆப்டிக்கல் கருவிகளும் இல்லாமல் அநாயசமாக வெள்ளிப் பதக்கத்தை வென்று கெத்துக்காட்டி இருக்கிறார் இந்த துருக்கி தல. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்ற வீரர்கள் தனித்து தெரிந்தார் இந்த யூசஃப்.
கிட்டத்தட்ட ஆரம்பம் படத்தில் இருக்கும் தல கெட்டப்பில்தான் இந்த மனிதரும் பாரீஸ் ஒலிம்பிக்கில் வலம் வந்துகொண்டிருக்கிறார்.
பெரும்பாலான துப்பாக்கி சுடும் வீரர்கள் சிறப்பு காது பாதுகாப்பு மற்றும் ஒரு கண்ணில் பார்வையைத் தடுக்கவும், ஒளிக்கூச்சைக் குறைக்கவும் லென்சுகளைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் யூசஃப் டிகெக்கிற்கு அப்படியெதுவும் தேவைப்படவில்லை. காதுகளைப் பாதுகாத்துக்கொள்ள சிறியதாக ஒரு கேட்ஜெட்டை அவர் அணிந்திருந்தாலும், மற்ற வீரர்களைப் போல பெரிய சைஸ் கேட்ஜெட் எதையும் அவர் அணியவில்லை.
துப்பாக்கி சுடுதல் யூசஃப்புக்கு புதிதல்ல. பாரீஸ் 2024 அவரது ஐந்தாவது ஒலிம்பிக். மேலும் பல்வேறு பிஸ்டல் போட்டிகளுக்கான உலக மற்றும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்களில் பல பட்டங்களையும் அவர் வைத்திருக்கிறார். அவர் துருக்கிய தேசத்தின் ஓய்வு பெற்ற அதிகாரி என்றும் சொல்லப்படுகிறது.
"எனக்கு சிறப்பு உபகரணங்கள் தேவையில்லை" என்று யூசஃப் உள்நாட்டு துருக்கிய ஊடகங்களிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.