உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த ஜூலை 26ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். இந்தியா சார்பில், 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேரும் இடம்பிடித்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த ஒலிம்பிக் திருவிழாவைச் சீர்குலைக்கும் விதமாக பல்வேறு அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, போட்டி தொடங்கும் நாளன்று பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரயில் வழித்தடங்களில் ஒரேநேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டது.
பிரான்ஸின் அதிவேக ரயில் சேவையை மர்ம நபர்கள் திட்டமிட்டு முடக்கினர். இந்தப் பரபரப்பு சம்பவத்தால் பல வழித்தடங்கள் பாதிக்கப்பட்டதுடன், ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டன. இன்னும் சில வழித்தடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், சுமார் 8 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர். பின்னர் பாதிப்புகள் மெல்ல மெல்ல சரிசெய்யப்பட்டு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்தநிலையில், நேற்று (ஜூலை 29) பிரான்ஸ் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பைபர் ஆப்டிக்ஸ் தொலைத்தொடர்பு கேபிள்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் செல்போன் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தச் சூழலில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் பாரிஸ் நகரில் புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஒலிம்பிக் போட்டிகள் பாதிக்கப்பட வாய்ப்பு என உள்ளூர் ஊடகம் தகவல் அளித்துள்ளது.
முன்னதாக, ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா, மொராக்கோ அணிகள் மோதியபோது, மைதானத்திற்குள் ரசிகர்கள் ஊடுருவினர். தண்ணீர் பாட்டில்கள், பதாகைகளை வீசி ரசிகர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்ட நிலையில், போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. அதற்கு முன்பாக, கடந்த மூன்று மாத காலமாக பாரீஸ் நகரில் தங்கியிருந்த வீடற்றவர்களை ஆயுதம் ஏந்திய பிரெஞ்சு போலீஸ் அப்புறப்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.