பாரிஸில் நடந்து வரும் 2024 பாராலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீரர் சுஹாஸ் யதிராஜ் வெள்ளிப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்த சுஹாஸ், தொடர்ச்சியாக தனது இரண்டாவது வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம் பாராலிம்பிக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட பதக்கங்களை வெல்லும் முதல் பேட்மிண்டன் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் SL4 பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சுஹாஸ் யதிராஜ், பிரான்சின் லூகாஸ் மசூரை எதிர்த்து விளையாடினார். உலக தரவரிசை பட்டியலில் நம்பர் 1 வீரராக இருந்துவரும் யதிராஜ் எப்படியும் தங்கத்தை எடுத்துவருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அன்றைய நாள் அவருக்கு அரைநாளாக அமைந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற 9-21, 13-21 என்ற நேர் செட்களில் பிரான்சின் லூகாஸ் மசூரிடம் தோல்வியடைந்த சுஹாஸ் யதிராஜ் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
பாராலிம்பிக்கில் இரண்டு வெள்ளிகளை கைப்பற்றிய சுஹாஸ் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. 2020 ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற சுஹாஸுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. அர்ஜுனா விருது வென்ற அவர், இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விளையாட்டு விருதை வென்ற முதல் மற்றும் ஒரே ஐஏஎஸ் அதிகாரியாக இந்திய வரலாற்றில் முத்திரை பதித்தார்.
கர்நாடகாவின் ஹஸ்ஸனைச் சேர்ந்த 41 வயதான யதிராஜ், பிறவியிலேயே இடது கணுக்காலில் ஏற்பட்ட குறைபாட்டால் பாதிக்கப்பட்டார். சூரத்கல்லில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (NIT) கணினி பொறியியலில் பட்டம் பெற்ற அவர், உத்தரபிரதேச கேடரின் 2007 பேச்சின் ஐஏஎஸ் அதிகாரியும் ஆவார். ஐஏஎஸ் அதிகாரியாக கவுதம் புத்த நகர் மற்றும் பிரயாக்ராஜ் மாவட்ட மாஜிஸ்திரேட்டாகவும் பணியாற்றியுள்ளார்.
தற்போது, யதிராஜ் இளைஞர் நலன் மற்றும் உத்தரபிரதேச அரசாங்கத்தின் கீழ் ஒரு துறையான பிரந்தியா ரக்ஷக் தளத்தின் செயலாளர் மற்றும் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாவது வெள்ளிப் பதக்கம் வென்ற சுஹாஸ் யதிராஜுக்கு, பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் சச்சின் டெண்டுல்கர் முதலியோர் வாழ்த்து தெரிவித்தனர்.