தோற்ற இடத்தில் இருந்துதான் வெற்றியை தொடங்க முடியும்.. விழுந்த இடத்தில்தான் ஓங்கி உயர்ந்து எழுந்து நிற்க வேண்டும்.. ஒரு ஒலிம்பிக் கொடுத்த தோல்வியின் கொடும்வலியை, இன்னொரு ஒலிம்பிக் மறக்க வைத்திருக்கிறது. உயிர்த்தெழ வைத்திருக்கிறது.
காலச்சக்கரத்தை ஒரு புரட்டு புரட்டினால், 16 வயது மனு பாக்கரின் வெற்றி முகம் மட்டுமே அனைவருக்கும் தெரியவரும். அந்த 16 வயதில் சர்வதேச அளவில் முதல் தங்கப் பதக்கத்தை ருசித்த மனுவுக்கு காமன்வெல்த் போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வசப்பட்டது. 17 வயதில் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வானார்.. 18 வயதில் உலகக்கோப்பையில் 7 தங்கப்பதக்கங்கள், 19 வயதில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை.. இப்படி துப்பாக்கியைத் தொட்டது முதலே வெற்றிகளையும், பதக்கங்களையும் குவித்தவர் மனு.. தங்கப்பதக்கங்கள் அளித்த தன்னம்பிக்கையுடன் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கை எதிர்கொண்டிருந்தார் மனு.. அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் மனு பாக்கரை 3 பிரிவுகளில் களமிறக்க இந்திய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் நினைத்தது. இதற்கு பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா எதிர்ப்பு தெரிவித்தார். 3 பிரிவுகளில் போட்டிகளை எதிர்கொள்வது மிகவும் இளம் வீராங்கனையான மனு பாக்கருக்கு அதீத சுமை என்றார். ஆனால் துப்பாக்கிச்சுடுதல் சங்கமும், மனு பாக்கரும் இதனை ஏற்க மறுத்தனர். ஒரு கட்டத்தில் பயிற்சியாளர் ஜஸ்பால் ராணாவுடன் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்த மனு, ஜஸ்பால் ராணாவின் பயிற்சியை முறித்துக் கொண்டார்.
அதீத நம்பிக்கையுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குச்சென்றார் மனு. ஆனால், ஜஸ்பால் சொன்னதுதான் நடந்தது. எதிர்கொண்ட போட்டிகளில் எல்லாம் மனுவுக்கு தோல்விகளே கிடைத்தன. அதுவரை வெற்றிகளையே மட்டுமே ருசித்துக்கொண்டிருந்த மனுவை, டோக்கியோ ஒலிம்பிக்கில் கிடைத்த தோல்வி மனம் உடைய வைத்தது. மொத்தமாக நொறுங்கிப் போனார் மனு.
அதன் பிறகு துப்பாக்கியை ஏந்தி பயிற்சி செய்தாலும், அவர் மனம் நிறையவில்லை. ஒரு கட்டத்தில் துப்பாக்கிச்சுடுதலை கைவிடக்கூட நினைத்தார். ஆனால் அவரால் முடியவில்லை. தனது பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா கூறியதில் இருந்த உண்மையை உணர்ந்த மனு, மீண்டும் அவரை நாடினார். அந்தநொடியில் அத்தனையும் மாறிப்போனது.
எந்த ஆசிரியருக்கும் தனது மாணவி ஸ்பெஷல்தான். மனுவின் மன மாற்றத்தை ஏற்றுக்கொண்டு மீண்டும் பயிற்சியளிக்கத் தொடங்கினார் ஜஸ்பால் ராணா. அதன் பின்னர் களமிறங்கிய 2023 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மீண்டும் தங்கத்தை தட்டிச்சென்ற மனு, தனது தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் மீட்டெடுத்தார். இப்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். மகளிர் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் வெண்கலம் வென்றுள்ள அவர், கலப்பு இரட்டையர் பிரிவிலும் பதக்கத்தை முத்தமிடுவாரா என்ற எதிர்பார்ப்பு இந்தியர்களிடையே எழுந்திருக்கிறது. REDEMPTION என்ற வார்த்தையை விளையாட்டில் அதிக இடத்தில் பயன்படுத்தினாலும், இந்திய விளையாட்டு வரலாற்றில் தற்போதுவரை பார்த்தால் REDEMPTION என்ற வார்த்தை மனு பாக்கரின் வெற்றிக்கதைக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது.