சில வீரர்கள் தாங்கள் கொண்ட லட்சியத்திற்காக பல இன்னல்களையும் தடைகளையும் கடந்துவந்திருப்பதை நாம் இதற்கு முன்பு பலமுறை கேள்விபட்டிருப்போம். ஆனால் யாரை நாம் ரோல்மாடாலாக பார்த்தோமோ... யாரைப்போல் நாமும் வரவேண்டும் என நினைத்திருந்தோமோ... யாரை பின்தொடர்ந்து நம் திறமையை வளர்த்தோமோ... அவரையே களத்தில் எதிர்கொள்ளும் ஒரு கடினமான நிலையை நாம் ஒருநாள் எதிர்கொள்வோம். அப்படித்தான் அமன் ஷெராவத்துக்கும் தன் குருவை முக்கியமான ஒரு கட்டத்தில் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அப்போது, தான்கொண்ட லட்சியத்திற்காக குருவையே எதிர்த்து நின்ற அந்த சிஷ்யன், அவரை வீழ்த்தினார் என்பது வரலாறு. இவருடைய குரு, ரவி தஹியா. ரவி தஹியா, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் உலக வீரர்களை எதிர்த்து வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்றாலும், கண்ணில் எந்தவிதமான பயத்தையும் எதிர்கொள்ளாமல் நேருக்கு நேர் அவரை எதிர்கொண்டார் அமன் ஷெராவத். எங்கே? எப்படி? பார்ப்போம்...
2024 பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தின் தகுதிசுற்றில் தன் குருவான ரவிகுமார் தஹியாவை எதிர்கொண்டார் அமன் ஷெராவத். அப்போது, ரவிகுமாரை 12-4 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய அமன் ஷெராவத், தனியொரு மல்யுத்த ஆண் வீரராக இந்தியாவிற்காக நடப்பு ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார்.
அமன் ஷெராவத் என்னதான் தன்னை நெஞ்சுரம் கொண்ட மல்யுத்த வீரராக முன்னிருத்தினாலும், அவர் கடந்துவந்த பாதையானது கடும் இன்னல்கள் கொண்ட பாதையாகவே இருந்துவந்துள்ளது. பூப்பாதைக்கு முன் அவர் கடந்த வந்த முள்பாதை என்ன என்பதை இங்கே பார்ப்போம்...
ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பீரோஹரில் ஜுலை 16, 2003-ம் ஆண்டு ஷெராவத் கோத்ரா குடும்பத்தில் பிறந்தவர் அமன் ஷெராவத். அவருடைய இளமை காலம் என்பது கவலைகளால் சூழப்பட்டதாகவே இருந்தது. தன்னுடைய 10 வயதில் தாயை இழந்த அமன், 11 வயதில் தன்னுடைய தந்தையையும் இழந்தார்.
தாய் மற்றும் தந்தை என அடுத்தடுத்து இரண்டு பெரிய இழப்புகளை கண்ட அமன் ஷெராவத் மற்றும் அவருடைய தங்கை இருவரும், குழந்தைப் பருவத்தை கடக்க மாமா, அத்தை என பல உறவுகளின் பராமரிப்பில் இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.
இருக்க இடமில்லை, தாய் தந்தை இழப்பு, பார்த்துக்கொள்ள யாருமில்லை... என்ற கடினமான சூழலில் மன அழுத்தத்துடன் போராடிய அமனை அதிலிருந்து மீட்பதில், அவருடைய தாத்தா மங்கேராம் ஷெராவத் பெரிய பங்காற்றினார். அதன்பின்னரே அமனின் கவனம் மல்யுத்தத்தின் பக்கம் திரும்பியது. 2012 ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற சுஷில் குமார் மூலம் ஈர்க்கப்பட்ட அமன், தன்னுடைய 11 வயதில் டெல்லியில் உள்ள சத்ரசல் ஸ்டேடியத்தில் சேர்ந்தார்.
இந்திய மல்யுத்தத்தின் நர்சரி என அழைக்கப்படும் சத்ரசல் மல்யுத்த பட்டறையானது, இந்தியாவின் கடைசி நான்கு ஆண் ஒலிம்பிக் பதக்க வீரர்களான சுஷில் குமார், யோகேஷ்வர் தத், பஜ்ரங் புனியா மற்றும் ரவி தஹியா முதலிய ஒலிம்பியன்களை உருவாக்கியுள்ளது. அந்தப்பட்டியலில் 5வது வீரராக உருவெடுக்கும் நம்பிக்கையை அமன் கொண்டிருந்தார்.
2014-ம் ஆண்டு 11 வயது சிறுவனாக அங்குசென்ற அமன், அந்த பெரியவர்களைப் போலவே கடினமான மணல் குழிகளிலும் நுரை பாய்களிலும் மல்யுத்தத்தின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டார். மூத்தவீரர்களை பின்தொடர்ந்து உக்திகளை கற்றுக்கொண்ட அமன், சுஷில் குமாரின் பணி நெறிமுறையால் ஈர்க்கப்பட்டாலும், ரவி தஹியாவுடன்தான் அதிகம் நெருக்கமாக இருந்தாராம்.
ஒருகட்டத்தில் அமன், ரவிகுமார் தஹியாவை பின்பற்றி அவரைப்போலவே மாற ஆசைப்பட்டுள்ளார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிவென்ற ரவி தஹியா பயிற்சி பெறுவதை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த அமனின் கூரிய கண்கள், அவரின் மல்யுத்த உக்தியை அப்படியே பின்தொடர்ந்தன. ரவியை ரோல்மாடாலாக பார்த்த அமனுக்கு அது அதிக வெற்றியை பரிசளித்தது, உடன் ரவியின் உணவுபழக்கம் அனைத்தும் பின்பற்றி ரவியாகவே மாற அமன் முயற்சிசெய்துள்ளார். அதனால்தான் இருவரும் ஆண்கள் 57 கிலோ எடைப்பிரிவை கொண்டிருந்தனர்.
ஆனால் வேடிக்கை என்னவென்றால் 2024 பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு செல்லவேண்டுமானால் ரவி தஹியா அல்லது அமன் ஷெராவத் என்ற குரு-சிஷ்யன் இருவரில் ஒருவர் மட்டுமே செல்லமுடியும் என்ற நிலைமையை காலம் ஏற்படுத்தியது. இருவரும் ஒரே பிரிவில் இடம்பெற்றதால், இருவரும் தகுதிச்சுற்றில் இறுதிப்போட்டியில் ஒருவருக்கு ஒருவர் பலப்பரீட்சை நடத்தினர்.
இப்போது ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக். 2024 ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கு முன்னதாக ரவி தஹியாவும், அமனும் 2022 காமன்வெல்த் போட்டியில் மோதியிருந்தனர். அதில் ரவியிடம் 0-10 என்ற கணக்கில் தோல்வியடைந்த அமனுக்கு அது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனதளவில் உடைந்துபோன சிஷ்யன் குருவிடம் தோற்றுப்போன வீடியோவையே திரும்ப திரும்ப போட்டு பார்த்து, எந்த இடத்தில் தோற்றோம், எப்படி அவரை வீழ்த்த முடியும் என்று கணக்கிட்டு கொண்டிருந்தார்.
இந்நிலையில் 2024 ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் ரவியை குருவாகவும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவராகவும் பார்க்காமல் ஒரு சக எதிரியாக பார்த்த அமன், ரவிக்கு எதிராக ஆக்ரோஷமான ஒரு ஆட்டமுறையை ஆடினார். இந்தமுறை சிஷ்யன் அமனை கட்டுக்குள் கொண்டுவருவது குருவான ரவிக்கு பெரும் சவாலாகவே இருந்தது. ஆட்டத்தை கண்ட்ரோல் செய்து எடுத்துவருவதற்குள் ரவியை 12-4 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியே விட்டார் அமன்.
ரவி தஹியாவை பின்பற்றிய அமன், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ரவி வெள்ளிப்பதக்கம் வென்ற போது, “நான் 2024 ஒலிம்பிக்கிற்கு அதே எடைப் பிரிவில் செல்வேன், பதக்கம் வெல்ல அனைத்தையும் செய்வேன்” என்ற வார்த்தைகளை உதிர்த்திருந்தார். தான் கொண்ட லட்சியத்திற்காக குருவையே வீழ்த்தி 2024 பாரீஸ் ஒலிம்பிற்கு வந்த சிஷ்யன், தற்போது அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.
"இது எளிதாக இருந்தால், எல்லோரும் அதைச் செய்வார்கள்" என்ற வாசகமானது அமனின் அறையில் பெரிதாக எழுதப்பட்டிருக்கும் வாக்கியமாகும். சத்ரசல் ஸ்டேடியத்தில் உள்ள அமனின் அறை மொத்தமும் அவரது லட்சியங்களை பிரதிபலிக்கிறது. அவர் தலைவைத்து படுக்கும் இடத்தின் வலதுபுறத்தில் ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் வென்ற பிறகு அவருக்கு வழங்கப்பட்ட "Qualified Athlete" அட்டை உள்ளது. "EASY" என்ற வாக்கியத்திற்கு அடுத்ததாக பெரிய பெரிய எழுத்துக்களில் ”GOLD” என்ற வார்த்தை எழுதப்பட்டுள்ளது. அவரின் சதுரஅறையின் மஞ்சள் சுவர்களில் தங்கப்பதக்கத்தின் படங்களின் தொகுப்புடன் பூசப்பட்டுள்ளது.
அமன் பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் உறுதியுடன் இருக்கிறார், ஆனால் அவர் பதக்கத்தின் வண்ணத்தை பற்றி கவலை கொள்ளவில்லை. பாரீஸ் ஒலிம்பிக் குறித்து பேசியிருக்கும் அமன், "நான் பதக்கத்தைப் பற்றி யோசிக்கவில்லை, இப்போது கடினமாக உழைக்க வேண்டும் என்பது மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. என்ன பதக்கம் என்பதை இறைவன் தீர்மானிப்பார்" என்று கூறி பதக்கம் வெல்வதில் உறுதியுடன் இருக்கிறார்.
* 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 57 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம்
*2023 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம்
* 2024 ஜனவரியில், ஜாக்ரெப் ஓபன் மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கம்
ஆகியவற்றை வென்று அசத்தி உள்ளார்.