2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் நாட்டிற்காக ஒரு வெண்கல பதக்கத்தையாவது வென்றுவிட மாட்டோமா என்ற கனவுடன் போராடிவந்தனர். பொதுவாக தனக்காகவும் தங்களுடைய திறமையை நிரூபிக்கவும் விளையாடி, பின்னர் நாட்டிற்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவேண்டும் என்பதே ஒவ்வொரு வீரர் வீராங்கனைக்குமான கனவாக இருக்கும்.
ஆனால், உலக வரைபடத்தில் சிறிய புள்ளியாக இருக்கும் ஒரு குட்டி நாட்டில் பிறந்த வீராங்கனை ஒருவர், தன்னுடைய நாட்டிற்காக உலக அரங்கில் ஒரு பதக்கத்தையாவது வென்றுவிடவேண்டும் என்பதற்காகவே தன்னை தயார்படுத்தி, 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். 28 வருடங்களாக ஒலிம்பிக்கில் ஒரு பதக்கமாவது கிடைத்துவிடாதா என்று ஏங்கிய ஒரு நாட்டின் கனவை, 23 வயதில் தங்கம் வென்று பூர்த்தி செய்துள்ளார் ஜூலியன் ஆல்ஃபிரட் என்கிற செயின்ட் லூசியா நாட்டு வீராங்கனை.
’செயின்ட் லூசியா’ என்பது மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரம் மட்டுமே (2024-ன் படி 179,744) மக்கள் தொகை கொண்ட கரீபியன் நாடுகளில் இருக்கும் ஒரு குட்டி நாடாகும். வட அமெரிக்கக் கண்டத்தின் இந்த கிழக்கு கரீபியன் நாடானது, நம் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்தை விட மிகவும் சிறியதாகும். அதை உலக வரைபடத்தில் கண்டுபிடிக்க வேண்டுமென்றால் நமக்கு ஒரு லென்ஸ் தேவைப்படும். அப்படிப்பட்ட ஒரு நாட்டில் இருந்து வந்தவர் தான் பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றவரான ஜூலியன் ஆல்ஃபிரட்.
1996 முதல் செயின்ட் லூசியா ஒலிம்பிக்கில் பங்கேற்றுவருகிறது, இதுவரை 31 வீரர்கள் செயின்ட் லூசியாவிற்காக பங்கேற்றாலும் இதுவரை ஒரு பதக்கம் கூட வென்றதில்லை. நாட்டின் 28 வருட கால வறட்சியை முடிவுக்கு கொண்டுவந்திருக்கும் ஜூலியன் ஆல்ஃபிரட், தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டு பதக்கங்களை வென்று செயின்ட் லூசியாவிற்காக பதக்கம் வென்ற முதல் வீரர் மற்றும் ஒரே வீரர் என்ற சரித்திரத்தை தன்பெயரில் எழுதினார்.
23 வயதில் வேகத்தின் புதிய ராணியாக மாறியிருக்கும் ஜூலியன் ஆல்ஃபிரட், பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதிய வரலாற்றை தன் பெயரில் எழுதினார். அவருக்கு போட்டியாக களத்தில் இருந்தது எல்லோராலும் தங்கம் வெல்லுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் ஷாகாரி ரிச்சர்ட்சன்.
ஓடுவதற்கு ஷூ வாங்ககூட பணம் இல்லாமல் லூசியாவின் தெருக்களில் வெறுங்கால்களோடு ஓடிய ஆல்ஃபிரட், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மிகப்பெரிய லட்சியத்தை தன் கால்களின் பலமாய் மாற்றியிருந்தார். தொடக்கம் முதலே முன்னிலை வகித்த அவருடைய கால்கள், இறுதிவரை அதை விட்டுக்கொடுக்கவில்லை.
இதையும் படிக்க: “ஒரு வாத்து வாங்க ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சிறுமி..”! 14 வயதில் நாட்டின் இளம் வீரராக சாதனை!
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 10.72 வினாடிகளில் தேசிய சாதனையுடன் முதலிடத்தைப் பிடித்தார், ஜூலியன் ஆல்ஃபிரட். தங்கம் வெல்லுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் ரிச்சர்ட்சன் 10.87 வினாடிகளும் வெள்ளிப் பதக்கத்தையும், சக அமெரிக்க வீராங்கனையான மெலிசா ஜெபர்சன் 10.92 வினாடிகளில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றது மட்டுமில்லாமல், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கத்தையும் தட்டிச்சென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் கூட வெல்லாத செயின்ட் லூசியாவிற்கு, பதக்கம் வென்ற முதல் வீரர், தங்கம் வென்ற முதல் வீரர், ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பல சாதனைகளை வாரிகுவித்து வரலாறு படைத்தார்.
10 ஜூன் 2001-ம் ஆண்டு பிறந்தவரான ஜூலியன் ஆல்ஃபிரட், தன்னுடைய 12 வயதில் தன்னுடைய தந்தையை இழந்தவர். சிறுவயதில் பள்ளியின் ஓட்டப்பந்தயத்தில் ஆண் சிறுவர்களோடு ஓடி தன்னுடைய திறமையை நிரூபித்த ஆல்ஃபிரட்டை, ஒரு நூலகர் தான் முதன்முதலில் அடையாளம் கண்டார். ஆனால் அவருக்கான பாதை அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை, 12 வயதாக இருந்தபோது தந்தையை இழந்த ஜூலியனுக்கு அதுபெரிய அடியாக இருந்தது. தந்தையை இழந்தபிறகு அவருடைய அத்தையான கரேன் ஆல்ஃபிரட் உதவியால் வளர்க்கப்பட்டார்.
கால்களுக்கு ஷூ கூட வாங்க பணம் இல்லாமல் தெருக்களில் வெறுங்கால்களோடு பயிற்சிபெற்ற ஜூலியன், 15 வயதில் மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் அண்டர்-15 சாம்பியனாக மாறினார். அதற்குபிறகு 2017-ல் செயிண்ட் லூசியாவில் ஆண்டின் சிறந்த இளைஞர் தடகள வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையும் படிக்க: No.1 உலக வீரரை 1-1 என திணறடித்த ரித்திகா ஹூடா.. சமன்செய்த போதும் ஏன் தோல்வி? வேறு வாய்ப்பு உள்ளதா?
ஆனால் 2018-ல் நடந்த யூத் ஒலிம்பிக்கில் பங்கேற்றபோது, அவரது அத்தையும் ஜூலியன் பறிகொடுத்தார். அந்த யூத் ஒலிம்பிக்கில் ஜூலியன் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் தனது அத்தையின் மரணத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்தார். இதன் காரணமாக இரண்டு ஆண்டுகளாக எந்தவிதமான விளையாட்டிலும் பங்கேற்காமல் விலகி இருந்தார். அதற்கு பிறகு முதல் கிளப் பயிற்சியாளரின் ஆதரவுடன் ஜமைக்கா, அமெரிக்கா என்று சென்று தன்னுடைய பயிற்சிகளை மேற்கொண்ட ஜூலியன் ஆல்ஃபிரட், தனது நாடான செயின்ட் லூசியாவின் அறிமுகமாக மாறும் முடிவை கையில் எடுத்தார்.
2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் வென்றதையடுத்து அவர் தன்னுடைய பெயரை ”ஒலிம்பிக் சாம்பியன் ஜூலியன் ஆல்ஃபிரட்” என எழுதினார். ஜூலியனின் 2 பதக்கங்களால் 2024 பாரீஸ் ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் 54வது இடத்தில் இருக்கிறது செயின்ட் லூசியா.. ஜூலியன் தற்போது தன் நாட்டின் தங்கமகளாக உருவெடுத்துள்ளார், வாழ்த்துக்கள் சாம்பியன்!