பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை மாதம் 26-ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா, கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்து பதக்கங்களை வேட்டையாடினர்.
இந்தியா சார்பில், 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றதில், அவர்கள் 5 வெண்கலம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கத்துடன் 6 பதக்கங்களைக் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து 17-வது பாராலிம்பிக் போட்டிகள், அதே பாரிஸ் நகரில் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கியது. பாராலிம்பிக் தொடரில் மாற்றுத்திறனாளிகள், நிரந்தர காயமுற்றவர்கள், உடல் உறுப்பு குறைபாடுடைய 4.400 வீரர், வீராங்கனைகள் 22 விதமான போட்டிகளில் 549 பதக்கங்களுக்காக பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பாரிஸ் பாராலிம்பிக்கில் கலந்துகொண்டு இருக்கின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, சிவராஜன், நித்திய ஸ்ரீசிவன், வீராங்கனைகள் மனிஷா ராமதாஸ், துளசி முருகேசன், கஸ்தூரி ராஜாமணி ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்தமுறை 38 பேர் கொண்ட குழு சென்று, 19 பதக்கங்களை பெற்றது. தற்போது அதிக வீரர், வீராங்கனைகள் செல்வதால் பதக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க; சத்ரபதி சிவாஜி சிலை கீழே விழுந்த விவகாரம்| மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!
அந்த வகையில், இன்று நடைபெற்ற 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகரா 2-ஆவது முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளார். இவர், கடந்த டோக்கியோ பாராலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார். இதன்மூலம் தொடர்ந்து பாரா ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். அதுபோல், மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வாலும் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இந்தப் பிரிவின் இறுதிச்சுற்றில் 8 வீராங்கனைகள் கலந்துகொண்டனர். அதில் இந்தியா சார்பில் அவனி லேகரா, மோனா அகர்வால் கலந்துகொண்டனர். அவனி லேகரா 249.7 புள்ளிகளுடன் முதலிடத்தையும், தென்கொரியாவின் லீ யுன்ரி 246.8 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும், மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வால் 228.7 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும் பிடித்து பதக்கங்களை முத்தமிட்டனர்.