பாரீஸ் நகரில் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வரும் ஒலிம்பிக் திருவிழாவில் ஒவ்வொரு நாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் தங்களது திறமைகளை நிரூபித்து பதக்க வேட்டையாடி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் சர்ச்சைகளும் பல்வேறு விநோத சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், நீச்சல் வீராங்கனை ஒருவர் போட்டிக்குப் பிறகு திடீரென மயக்கம் போட்டு விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்லோவாகியா நாட்டைச் சேர்ந்தவர் தமரா பொடோக்கா (Tamara Potocka). 21 வயதான இவர், அந்நாட்டின் பிரதான நீச்சல் வீராங்கனையாக அறியப்படுகிறார். இந்த நிலையில், தமராவும் ஒலிம்பிக்கில் நீச்சல் பிரிவில் விளையாடத் தகுதி பெற்றிருந்தார்.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற 200 மீட்டர் பெண்கள் ஒற்றையர் பிரிவில், காலிறுதிக்குத் தகுதி பெறும் சுற்றில் கனடா நாட்டு வீராங்கனையுடன் விளையாடினார். இதில், 2 நிமிடங்கள் 14.20 நொடிகளில் 200 மீட்டரைக் கடந்து நீச்சல் குளத்தில் இருந்து வெளியேறிய தமரா, திடீரென மயங்கி விழுந்தார். இது, அங்குள்ளவர்களை பரபரப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. அத்துடன் இந்த காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பின்னர், அங்கிருந்த மருத்துவக் குழுவினர் அவரை மீட்டு முதலுதவி அளித்தனர். தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ள தமரா, சுயநினைவுக்கு திரும்பியுள்ளதாக ஒலிம்பிக் கமிட்டியால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தப் போட்டியில் கனடா வீராங்கனை சம்மர் மெக்லண்டோஷே வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
தமரா பொடோக்காவுக்கு, இது முதல் ஒலிம்பிக் போட்டி ஆகும். அவர் ஸ்லோவாக்கியாவின் தலைநகரான பிராட்டிஸ்லாவாவில் வசித்து வருகிறார். இந்தச் சுற்றில் அவர் 7வது இடத்தைப் பிடித்துள்ளார்.