பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் 12 நாடுகளின் வீரர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு வீரருக்கும் 6 வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான நீரஜ் சோப்ரா, இரண்டாவது முயற்சியில் 89.45 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீசி 2வது இடம்பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தனிநபர் பிரிவில் தொடர்ச்சியாக இரண்டு பதக்கங்கள் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.
இதுதவிர ஒலிம்பிக்ஸ் போட்டியில் அடுத்தடுத்து தங்கம், வெள்ளி வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் தன்வசமாக்கியுள்ளார். ஈட்டி எறிதலில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எய்து புதிய சாதனை படைத்து தங்கம் வென்றார். கிரெனெடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.54 மீட்டர் தூரத்திற்கு வீசி 3ஆவது இடம்பிடித்து வெண்கலம் வென்றார்.
பாரிஸ் ஒலிம்பிக்சில் இந்தியா இதுவரை 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள நிலையில், தற்போது முதல் வெள்ளி பதக்கத்தை நீரஜ் சோப்ரா பெற்றுக் கொடுத்துள்ளார். நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றுள்ள நிலையில், ஹரியானாவில் உள்ள அவரது சொந்த ஊரில் குடும்பத்தினர் மற்றும் இளைஞர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், “மீண்டும் மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் சிறந்த ஆளுமை கொண்ட நீரஜ் சோப்ரா, எதிர்காலத்தில் வரவிருக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு ஊக்கமாக இருப்பார்” என கூறியுள்ளார்.