ஒரே வருடத்தில் பிறந்த நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம் இருவரும் ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் ஆக்கிரமித்திருந்த நார்வே, ஸ்வீடன், பின்லாந்து நாடுகளை பின்னுக்குதள்ளி புதுவரலாறை படைத்து வருகின்றனர்.
ஒலிம்பிக்கில் இரண்டு ஆசிய வீரர்கள் ஆதிக்கம் செலுத்துவது இதுவே முதல்முறை. இதுவரை ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் வழங்கப்பட்ட 69 ஒலிம்பிக் பதக்கங்களில், 32 பதக்கங்கள் நார்வே, ஸ்வீடன், பின்லாந்தை சேர்ந்த வீரர்களே வென்றுள்ளனர்.
இதுவரை இந்தியா-பாகிஸ்தான் இருநாட்டு மக்களும் கிரிக்கெட்டில்தான் இருநாட்டின் மோதலை உணர்வுபூர்வமாக பார்த்திருப்பார்கள். ஆனாலும் அதுவும் மோதல் மனநிலையில்தான் பார்ப்பார்கள். இப்போது எல்லாம் மாறியுள்ளது. அதுவும் ஒலிம்பிக் மேடையில் ஈட்டி எறிதலில் நிகழ்வதெல்லாம் அரிதான நிகழ்வாக அமைந்தது. இதை சாத்தியப்படுத்தியவர்கள், இந்தியா - பாகிஸ்தானின் தங்கமகன்கள் நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நசீம்.
இந்த இரண்டு வீரர்களும் தங்களுக்குரிய மரியாதையையும், இணக்கத்தையும் எப்போதும் வெளிப்படுத்தியுள்ளனர்.
அர்ஷத் நதீமின் திறமையை நேரில் கண்ட நீரஜ் சோப்ரா, புதிய ஈட்டி வாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அர்ஷத் நதீமிற்காக பொதுமேடையில் குரல் கொடுத்தார். “ஒரு சிறந்த ஈட்டி எறிதல் வீரருக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்படக்கூடாது” என தெரிவித்திருந்தார். “இந்திய அரசைப் போல, பாகிஸ்தான் அரசும் வீரர்களுக்கு உதவ வேண்டும்” என அர்ஷத்துக்கு நீரஜ் சோப்ரா கோரிக்கை வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதோடு முடியவில்லை... அதேபோல இதுவரை 2016 முதல் 10 சந்திப்புகளில் நீரஜ் சோப்ராவிடம் தோல்வியை சந்தித்திருந்த அர்ஷத் நதீம், தன்னுடைய காயத்தின் போது வீட்டில் இருந்தபோதெல்லாம் உத்வேகத்திற்கு நீரஜ் சோப்ராவின் வீடியோக்களைதான் பார்த்துதான் தன் முயற்சியை மெருகூட்டியுள்ளார். அதை அவருடைய மாமா கடந்தாண்டு தெரிவித்திருந்தார்.
இப்படி இரண்டு வீரர்களும் ஒருவர் மேல் ஒருவர் பற்றாக இருக்கும் வேளையில், பாரீஸ் ஒலிமிபிக்கில் தங்க வென்ற அர்ஷத் நதீமை பாராட்டிய நீரஜ் சோப்ராவின் அம்மா, “அர்ஷத் நதீமும் என்னுடைய மகனை போன்றவர்” என்று தெரிவித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறுதிப்போட்டிக்குபிறகு பேசிய நீரஜ் சோப்ராவின் தாய் சரோஜ் தேவி, “நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை வெள்ளியும் தங்கத்திற்கு சமம்தான். தங்கம் வென்ற அர்ஷத் நதீமும் எங்கள் மகனைப் போன்றவர்தான். நீரஜ் காயத்திற்கு பிறகு சென்று விளையாடியுள்ளார், அதனால் அவரது சிறந்த முயற்சியில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நான் அவருக்குப் பிடித்த உணவை சமைக்க போகிறேன்” என்று ஏஎன்ஐயிடம் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமும் தன்னுடைய மகனை போன்றவர் தான் என நீரஜ் சோப்ராவின் அம்மா இருநாட்டு ரசிகர்களையும் நெகிழவைத்ததை தொடர்ந்து, தற்போது அர்ஷத் நதீமின் தாயும் நீரஜ் சோப்ராவை தன்னுடைய மகன் என்று கூறியிருப்பது எல்லோருடைய மனதையும் வென்றுள்ளது.
மகன் தங்கம் வென்றது குறித்து பேசிய நதீமின் தாய் நீரஜ் சோப்ராவையும் புகந்து பேசினார். அதில், “நீரஜ் சோப்ராவும் என்னுடைய மகன் தான். அவர் நதீமின் நண்பர்.. சகோதரரும் கூட. விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் ஒரு அங்கம் தான். நிறைய பதக்கங்கள் வெல்ல கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும். அவர்கள் சகோதரர்கள் போன்றவர்கள். நான் நீரஜ்-க்காக கூட பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் 92.97மீ தூரம் எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனையை படைத்த அர்ஷத் நதீம், ஒலிம்பிக் வரலாற்றில் பாகிஸ்தானுக்காக தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற இமாலய சாதனையை படைத்தார். அதேபோல இந்திய ஒலிம்பிக்கில் இரண்டுமுறை பதக்கம் வென்ற 5வது இந்திய வீரர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்தார்.