பாரீஸ் நகரில் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வரும் ஒலிம்பிக் திருவிழாவில் ஒவ்வொரு நாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் தங்களது திறமைகளை நிரூபித்து பதக்க வேட்டையாடி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் சர்ச்சைகளும் பல்வேறு விநோத சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், பெண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை சுற்றில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினியும் அல்ஜீரியா வீராங்கனை இமானே கெலிஃபும் மோதினர்.
இதில் போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அதாவது 46 நொடிகளிலேயே கரினி மூக்கில் வேகமாக குத்துவிட்ட கெலிஃப், அவரது மூக்கை உடைத்தார். ரத்தம் வழிந்த நிலையில் அதிக வலியை பொறுத்துக்கொள்ள முடியாத கரினி, ’இனி போட்டியில் தொடர முடியாது’ என நடுவரிடம் கூறிவிட்டு அழுதார். அதனால் கெலிஃபு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் போட்டியில் தோற்ற கரினி, கெலிஃபுடன் கைகுலுக்கக்கூட விருப்பமில்லாமல் விலகிவிட்டார். தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் மேடையிலேயே முட்டிப்போட்டு கரினி அழ ஆரம்பித்துவிட்டார். இது, ஒலிம்பிக்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், அவருக்கு ஆதரவாகவும் கண்டனக் குரல்களும் எழுந்தன.
அதேநேரத்தில், இமானே கெலிஃப்க்கும் பலர் ஆதரவு அளித்தனர். குறிப்பாக, பாலின சர்ச்சையில் சிக்கி பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த், "இமானே கெலிஃப் பல சோதனைகளுக்குப் பிறகே ஒலிம்பிக்கில் விளையாட அனுமதிக்கப்பட்டிருப்பார். அவர், ஓர் ஆண் என்றால், அவரால் ஒலிம்பிக்கில் விளையாடி இருக்கவே முடியாது. அவர் போட்டிகளில் தோற்றபோதெல்லாம் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழவில்லை. இப்போது அவர் போட்டியில் வென்றதும் இந்த குற்றச்சாட்டுகள் எழ ஆரம்பித்துள்ளன. அவருக்கு ஆதரவாக நாம் இருக்கவேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த விகாரம் பெரிய அளவில் பேசுபொருளான நிலையில், IOC தலைவர் தாமஸ் பாக், ”பெண்ணாகப் பிறந்து, பெண்ணாக வளர்ந்து, பெண் பாலினத்திலேயே பாஸ்போர்ட் வைத்திருப்பவர் என்பது தெளிவான தீர்வாக உள்ளது. அவர், ஒரு பெண் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என தெரிவித்திருந்தார்.
அதுபோல சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ், "இமானே கெலிஃப் பெண்ணாகப் பிறந்து, பெண்ணாகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். பெண் பாலினத்திலேயே பாஸ்போர்ட் வைத்திருக்கிறார். ஆகவே, இதை தவறாக மாற்ற வேண்டாம்" என எச்சரித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையான நிலையில், இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர், "இந்தச் சர்ச்சை அனைத்தும் என்னை வருத்தமடையச் செய்கிறது. எனக்கு எதிராக விளையாடிய இமானே கெலிஃப்பை நினைத்து நான் வருந்துகிறேன். நான் இமானே கெலிஃப்பிடமும் மற்ற அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
கெலிஃப்பைச் சந்திக்க இன்னொரு வாய்ப்பு கிடைத்தால், அவரை நான் தழுவிக்கொள்வேன். இது வாழ்நாளில் ஒரு முக்கியப் போட்டியாக இருந்திருக்கலாம். ஆனால், அந்த தருணத்தில் என் உயிரைக் காப்பாற்ற வேண்டியிருந்தது" எனறு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஏஞ்சலா கரினியை வீழ்த்திய இமானே கெலிஃபின் தந்தை ஒமர் கெலிஃப், "என் குழந்தை ஒரு பெண். அவள் ஒரு பெண்ணாகவே வளர்க்கப்பட்டாள். அவள் ஒரு வலிமையான பெண். நான் அவளை திறமையுடனும் தைரியத்துடனும் வளர்த்தேன். அவளுக்கு போட்டியில் வெல்வதற்கு வலுவான விருப்பம் உள்ளது. எனது மகள் வலிமையாகவும் மென்மையாகவும் இருக்கிறாள். அதனால்தான், இத்தாலிய எதிராளியால் என் மகளைத் தோற்கடிக்க முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.